விபத்துகள் ஏற்படுவதை தடுக்க பாதுகாப்பு விதிகள் முழுமையாக பின்பற்றப்பட வேண்டும்: ராமதாஸ்

சுற்றுலா தொடர்வண்டியில் ஏற்பட்ட தீ விபத்துக்கு அதிகாரிகளின் அலட்சியமும், பயணிகளின் பொறுப்பற்றத் தன்மையும் தான் காரணமாகும். விபத்துகள் ஏற்படுவதை தடுக்க பாதுகாப்பு விதிகள் முழுமையாக கடை பிடிக்கப்படுவதை தொடர்வண்டித்துறை உறுதி செய்ய வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

மதுரை தொடர்வண்டி நிலையத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா தொடர்வண்டி பெட்டிகளில் இன்று காலை ஏற்பட்ட கொடிய தீ விபத்தில், அதில் பயணம் செய்த உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 9 பயணிகள் உயிரிழந்திருப்பதும், மேலும் பலர் காயமடைந்திருப்பதும் மிகுந்த வேதனையளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சுற்றுலா தொடர்வண்டியில் ஏற்பட்ட தீ விபத்துக்கு அதிகாரிகளின் அலட்சியமும், பயணிகளின் பொறுப்பற்றத் தன்மையும் தான் காரணமாகும். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி, தீ விபத்துக்கு காரணமான பாதுகாப்பு குறைபாடுகளுக்கு பொறுப்பானவர்கள் யார்? என்பதைக் கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிவரும் காலங்களில் இத்தகைய விபத்துகள் ஏற்படுவதை தடுக்க பாதுகாப்பு விதிகள் முழுமையாக கடை பிடிக்கப்படுவதை தொடர்வண்டித்துறை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

உத்தரபிரதேசத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு ஆன்மீக சுற்றுலா வந்த பயணிகள் ரெயில் இன்று அதிகாலை மதுரை ரெயில் நிலையம் அருகே சிலிண்டர் வெடித்ததில் தீப்பிடித்து எரிந்தது. இதில் 3 பெண்கள் உள்ளிட்ட 9 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துயர சம்பவத்திற்கு சிலிண்டர் வெடித்ததே காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் ரெயில் தீவிபத்து தொடர்பாக தனியார் நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த நிறுவனம் மீது தென்னக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் மதுரை ரெயில் விபத்து குறித்து ரெயில்வே ஏ.டி.ஜி.பி. வனிதா கூறியிருப்பதாவது:-

ரெயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் சதி வேலைகளுக்கான சாத்தியம் ஏதும் இல்லை. ரெயில் பெட்டியில் சிலிண்டர் அடுப்பில் தேநீர் போட்டுக் கொண்டிருந்தபோது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்யும் பணிகள் தொடங்கியது. பிரேத பரிசோதனை முடிந்தவுடம் 7 பேரின் உடல்கள் சென்னை கொண்டுவரப்பட்டு, விமானம் மூலம் உத்தரபிரதேசம் அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.