ஜக்கி வாசுதேவின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஈஷாவை அறநிலையத்துறையில் சேர்த்திட வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையம் வனப்பகுதியில் செய்துள்ள சட்டவிரோதக் கட்டுமானங்கள் மீது உரிய விசாரணை நடத்தி, அந்தக் கட்டுமானங்களை அகற்றுமாறும், குற்றச்செயல்களுக்குரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபுர்வாலா – நீதிபதி பி.டி. ஆதிகேசவலு அமர்வு 24.08.2023 அன்று ஆணை வழங்கியுள்ளது.
வெள்ளியங்கிரி மலைவாழ் பழங்குடி இன பாதுகாப்புச் சங்கத் தலைவர் முத்தம்மாள் அவர்கள், 2017ஆம் ஆண்டு இவ்வழக்கை உயர் நீதிமன்றத்தில் கொடுத்துள்ளார். அதில் அவர், “கோவை மாவட்ட மலைவாழ் பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையிலும், யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் இயற்கையான வாழ்வியல் முறைகளுக்கு இடையூறுகள் ஏற்படும் வகையிலும் வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் ஈஷா யோகா மையம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சிலையைச் சுற்றி வணிகக் கட்டடங்கள் பல கட்டப்பட்டுள்ளன. இந்த வனப்பகுதியில் இடைவிடாமல் பெருங்கூட்டங்கள் கூடுகின்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன.
நஞ்சை புஞ்சை சாகுபடி நிலங்கள் வருவாய்த் துறையால் முறைப்படி வகை மாற்றம் செய்யப்படாமலே வணிகச் சந்தைகளாக மாற்றப்பட்டு விட்டன. இவ்வாறான சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்படி சட்டவிரோதக் கட்டுமானங்கள் அனைத்தையும் அகற்றி பழையபடி மீளமைக்க, பழங்குடி மக்கள் மற்றும் மலைவாழ் விலங்குகள் பயன்படுத்தும் இயற்கை இடங்களாக மாற்றப்பட வேண்டும்” – இவைதாம் பழங்குடி சங்கத் தலைவர் முத்தம்மாள் அவர்களின் நீதிமன்ற வழக்கின் (வழக்கு எண் – WP No. 3556 of 2017) சாரம்!
2017 முதல் நீண்டகாலமாகக் கிடப்பில் போடப்பட்ட இவ்வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கோவை மண்டல நகரமைப்புத் திட்டமிடல் துறைத் துணை இயக்குநர் ஆர். இராஜகுரு உயர் நீதிமன்றத்தில் எழுத்து வடிவில் அறிக்கை அளித்தார். தமிழ்நாடு அரசின் அந்த அதிகாரி கொடுத்த அறிக்கைதான், முறைப்படியான எந்த அனுமதியும் பெறாமல் ஜக்கி வாசுதேவ் மலைப்பகுதிகளில் யானைகளின் வழித்தடத்தில் வணிக ஆன்மிகக் கட்டுமானங்கள் எழுப்பியுள்ளதையும் அதிகார முறைப்படி அம்பலப்படுத்தியுள்ளது.
“ஈஷா யோகா மையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 20.805 ஹெக்டேர் நிலப்பரப்பில் 15.53 ஹெக்டேர் நஞ்சை நிலமாகவும், மீதி உள்ளவை புஞ்சை நிலமாகவும் உள்ளன. இதில் அரசு புறம்போக்கு நிலங்களும் இருக்கின்றன. இந்த நிலங்களில் கட்டப்பட்டுள்ள ஆதியோகி சிலை மற்றுமுள்ள கட்டுமானங்களுக்கு திட்ட அனுமதியோ அல்லது கட்டுமான அனுமதியோ வழங்கியதற்கான ஆவணங்கள் எதுவும் எங்கள் அலுவலகத்தில் இல்லை. இதேபோல், இக்கரைப் பூளுவாம்பட்டி ஊராட்சி அலுவலகத்திலும் இவற்றுக்கு அனுமதி வழங்கியது தொடர்பான ஆவணங்கள் இல்லை. மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், மலைப்பகுதி இடர் பாதுகாப்பு அமைப்பு, தீயணைப்புத் துறை ஆகியவை அனுமதி தந்ததற்கான ஆவணங்களும் அரசிடம் இல்லை” என்று அரசு உதவி இயக்குநர் கூறிவிட்டார்.
தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, “இந்த வழக்கில் மனுதாரர் மற்றும் ஈஷா யோகா மையம் தாக்கல் செய்யும் ஆவணங்களைக் கோவை மண்டல நகரமைப்பத் திட்டமிடல் துணை இயக்குநர் முறையாக ஆய்வு செய்ய வேண்டும். அப்போது, மேற்படி கட்டுமானங்களுக்கு உரிய அனுமதி பெறப்படவில்லை என்று தெரிய வந்தால், சட்டப்படியான நடவடிக்கைகளை விரைவாக எடுக்க வேண்டும். ஈஷா யோகா மையம் தன்னிடமுள்ள ஆவணங்களை எல்லாம் இரண்டு வாரங்களுக்குள் கோவை மண்டல நகரமைப்புத் திட்டமிடல் துணை இயக்குநர் அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும்” என்று தனது தீர்ப்பில் கூறி, வழக்கை முடித்து வைத்துள்ளது.
இப்பொழுது, ஜக்கி வாசுதேவின் சட்டவிரோதச் செயல்கள் மீது உயர் நீதிமன்ற ஆணையின் படி நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு தமிழ்நாடு அரசிடம் உள்ளது. இத்தீர்ப்பு வந்த பின், 25.08.2023 அன்று ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது ஈஷா மையம். அதில், ஆதியோகி சிலை அமைக்கக் கோவை மாவட்ட ஆட்சியர் கடந்த 29.09.2016 அன்று அனுமதி வழங்கியுள்ளார் என்று கூறியுள்ளது. “இந்த அனுமதியை எங்கேயும் எப்போதும் அளிக்கத் தயாராக உள்ளோம்” என்றும் கூறியுள்ளது.
மேற்படி மாவட்ட ஆட்சியர் அனுமதிக் கடித அசல் நகல் நம்மிடம் இருக்கிறது. கோவை மாவட்ட ஆட்சியர் த.நா. ஹரிஹரன் கையொப்பமிட்டு 29.09.2016 நாளிட்ட கடிதம் அது. ஆதியோகி சிலை என்று அதில் குறிப்படப்படவில்லை. “சிவன் உருவச்சிலை” என்று தான் அதில் கூறப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் பல்வேறு நிபந்தனைகள் விதித்துள்ளார்கள். காத்திரமான கடைசி நிபந்தனை, “சிலை அமைத்தலின் ஆரம்பக் கட்டப் பணிகளின்போது தொடங்கி, தொடர்புடைய அனைத்து அரசுத் துறைகள் / உள்ளாட்சி / வருவாய் / காவல்துறை சட்ட விதிகளும் எவ்வித விதிமீறலுமின்றி தொடர்ந்து கடைபிடிக்கப்பட வேண்டும்” என்பதாகும்.
உள்ளாட்சி, ஊராட்சி, வருவாய்த்துறை போன்ற எந்தத் துறையின் அனுமதியும் சிவன் சிலைக்கு பெறவில்லை ஈஷா யோகா மையம்! இந்த உண்மையைத்தான் உயர் நீதிமன்றத்தில் இப்போது கோவை மண்டல நகரமைப்புத் துறை துணை இயக்குநர் ஆர். இராஜகுரு போட்டு உடைத்து விட்டார். அவர் வாக்குமூலத்தை ஏற்றுக் கொண்டுதான், உயர் நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. எனவே, 29.09.2016 அன்று கோவை மாவட்ட ஆட்சியர் சிவன் சிலை திறப்புக்கு அளித்த அனுமதி நிபந்தனைகளுக்கு உட்பட்டது. அந்த நிபந்தனைகளை ஜக்கியின் ஈஷா மையம் நிறைவேற்றவில்லை என்பது வெள்ளிடை மலை! அந்த விகாரமான ஈஷாவின் விதிமீறலை – ஆக்கிரமிப்பை தொடர்புடைய அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. அப்போது அ.இ.அ.தி.மு.க. ஆட்சி நடந்து கொண்டிருந்தது. சட்டவிரோத வளாகத்தில், சட்டவிதிகளின்படி அனுமதி பெறாத ஆதியோகி சிலையை தலைமை அமைச்சர் நரேந்திர மோடி வந்து திறந்து வைத்தார். ஈஷா மையம் அனுமதி கேட்டது சிவன் சிலைக்கு! மோடி திறந்ததோ ஆதியோகி சிலை! எதிலும் நேர்மை இல்லை; உண்மை இல்லை!
இன்னொரு முக்கியச் செய்தி – 2012ஆம் ஆண்டு, சட்டவிரோதமாக ஈஷா மையம் முறைப்படி அனுமதி வாங்காமல் புதிது புதிதாக ஜக்கி வாசுதேவ் மேற்படி வனப்பகுதி இடங்களில் கட்டடங்களைக் கட்டிக் கொண்டிருந்தார். அப்போது 12.10.2012 நாளிட்டு இதே கோவை மாநகரமைப்பு மற்றும் கிராமப்புறக் கட்டமைப்பு துணை இயக்குநர் ஓர் எச்சரிக்கை அறிவிக்கை ஈஷா மையத்துக்கு அனுப்பினார். அதில், “நாங்கள் ஆய்வு செய்தபோது, இக்கரைப் போளுவாம்பட்டி எல்லைக்குள் அனுமதி இல்லாமல் 34 பிளாக் – கட்டடத் தொகுப்புகளைக் கட்டி முடித்துள்ளீர்கள். உடனே இக்கட்டடப் பணிகளை நிறுத்த வேண்டும். மூன்று நாட்களுக்குள் முறையான அனுமதி வாங்க வேண்டும்” என்று கோரி இருந்தார். அதைச் சட்டை செய்யவே இல்லை, ஜக்கி!
அதன்பிறகு, அதே அதிகாரி 21.12.2012 அன்று இன்னொரு அறிவிக்கை அனுப்பினார் ஈஷாவுக்கு! “நீங்கள் இன்னும் 30 நாட்களுக்குள் கட்டுமானங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கும் ஆக்கிரமிப்பு இடங்களைக் கட்டடங்கள் இல்லாத பழைய நிலையில் மீளமைக்க வேண்டும். உரிய அதிகாரியிடம் அனுமதி வாங்கியிருந்தால் உடனே அதைக் கொண்டு இந்த அலுவலகத்தில் காட்ட வேண்டும்” என்று கூறி இருந்தார் அதிகாரி. எதையும் செய்யாமல் ஆக்கிரமிப்புக் கொள்ளை ராஜதர்பாருடன் நடத்தினார் ஜக்கி வாசுதேவ்!
இதேநிலை இப்போது உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்கும் ஏற்பட்டு விடாமல் – நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு இப்போதுள்ள தி.மு.க. ஆட்சிக்கு இருக்கிறது. அரசின் முறையான அனுமதிகளைப் பெறாமல், சட்டவிரோதக் கட்டுமானங்களை எழுப்பிய ஈஷா யோகா மையத்தினர் மீது குற்ற வழக்குப் பதிவு செய்து, அவர்களைக் கைது செய்ய வேண்டும். அத்துடன், உயர் நீதிமன்றத் தீர்ப்பை முழுமையாக – போர்க்கால வேகத்துடன் செயல்படுத்தி, ஜக்கி வாசுதேவின் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஈஷா யோகா மையத்தை தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையில் சேர்த்திட நடவடிக்கை எடுத்து, இயற்கைக்கும் பழங்குடி மக்களுக்கும் காட்டு உயிரினங்களுக்கும் தமிழ்நாடு அரசு நீதி வழங்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.