தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்கு 5000 கன அடி தண்ணீரை திறந்து விட காவிரி ஒழுங்காற்று குழு கர்நாடக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்த விவகாரத்தில் நாளைய கூட்டத்திலேயே இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.
கர்நாடகம்-தமிழகம் இடையே காவிரி நீர் பங்கீட்டு கொள்வதில் வறட்சி காலங்களில் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கேரளா மற்றும் கர்நாடகாவில் தென்மேற்கு பருவ மழை போதிய அளவு பெய்யவில்லை. ஜூன் மாதமும் ஆகஸ்ட் மாதமும் மழை சரியாக பெய்யவில்லை. ஜூலையில் மட்டுமே ஓரளவு மழை பெய்துள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் தமிழகத்திற்கு 52 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும். ஆனால் நீர் குறைவான அளவே இருப்பதால் தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடகா அரசு திட்டவட்டமாக தெரிவித்தது. தற்போது உள்ள 54 டிஎம்சி நீரை வைத்து பெங்களூரு, மண்டியா, மைசூரு, ராமநகர் மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவே முடியாத நிலை இருப்பதாக கர்நாடகா அரசு கூறி வருகிறது. இந்த சூழலில் தென்மேற்கு பருவமழை ஓரளவு பெய்ததை தொடர்ந்து கர்நாடகத்தில் காவிரி படுகையில் உள்ள கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து சுமார் 5 ஆயிரம் கன அடி நீரை கர்நாடகா அரசு திறந்துவிட்டது.
ஆனால் இந்த நீர் போதாது எனவும், கர்நாடகம் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 52 டி.எம்.சி. நீரை திறக்க உத்தரவிடக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கடந்த 14-ந் தேதி வழக்கு தாக்கல் செய்தது. இதைத்தொடர்ந்து கர்நாடக அணைகளில் இருந்து கடந்த 6 நாட்களாக வினாடிக்கு 22 ஆயிரம் கன அடிக்கும் மேல் காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசியல் கட்சியினர், விவசாய மற்றும் கன்னட அமைப்பினர் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தண்ணீர் திறந்துவிடும் கர்நாடகா மாநில காங்கிரஸ் அரசை கண்டித்து, எதிர்க்கட்சியான பாஜக மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் மண்டியா மாவட்டத்தில் கடும் போராட்டத்தில் ஈடுபட்டன. இதையடுத்து நீர் திறப்பை கர்நாடகா குறைத்தது.
இந்நிலையில் போதிய மழை பொழிவு இல்லாத சூழலில், 15000 கன அடி தண்ணீரை திறக்க இயலாது என்று கர்நாடகா அரசு உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் வழக்கில் பதில் அளித்தது. இந்த விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாகவோ அல்லது கர்நாடகத்தின் கோரிக்கையையோ உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை. எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கவில்லை. அதேநேரம் தமிழக அரசின் அவசர மனு மீது 3 நாட்களில் முடிவெடுக்க வேண்டும் என்று கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. மேலும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அறிக்கையையும் உச்ச நீதிமன்றம் கேட்டிருந்தது. இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 23-வது கூட்டம் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. நாளை பிற்பகல் 2.30 மணிக்கு டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் நீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடர்ந்த அவசர மனு மீது முடிவெடுக்கப்படும் என தெரிகிறது. இந்த கூட்டத்தில் 4 மாநில அதிகாரிகளும் கலந்து கொள்ள போகிறார்கள். இதில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட உள்ளது.
இதனிடையே இன்று காவிரி ஒழுங்காற்றுக்குழுக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்னோ, காவிரி தொழில்நுட்ப குழுத் தலைவர் சுப்பிரமணியம் உள்ளிட்டோர் காணொலி வாயிலாக பங்கேற்றனர். இந்த கூட்டத்தின் முடிவில் தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்கு 5000 கன அடி தண்ணீரை திறந்து விட காவேரி ஒழுங்காற்று குழு கர்நாடக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. தமிழக அரசு 24000 கனடி நீர் கேட்டிருந்த நிலையில் வெறும் 5 ஆயிரம் கன அடி திறந்துவிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் கோரிக்கை விவகாரத்தில் நாளைய கூட்டத்தில் இறுதி முடிவெடுக்கப்பட உள்ளது.