இந்திய எல்லையில் சீனா அத்துமீறியுள்ளது என்று ராகுல் காந்தி சொன்னது உண்மை என்று சிவசேனை எம்.பி. சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார்.
லடாக் சென்றுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அங்கு மக்களிடையே பேசும்போது, ‘கார்கில் அருகே சீனப் படைகள் அத்துமீறி நுழைந்துள்ளன. இந்தியாவின் ஒரு அங்குலம் நிலத்தைக் கூட சீனா கைப்பற்றவில்லை என்று பிரதமர் மோடி சொன்னது பொய். இது கார்கில் பகுதி மக்களுக்கும் தெரியும்’ என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் சீனாவுடனான எல்லைப் பிரச்னை குறித்துப் பேசிய சிவசேனை(உத்தவ் தாக்கரே தரப்பு) எம்.பி. சஞ்சய் ராவத் கூறியதாவது:-
இந்திய பகுதிகளான அருணாச்சல பிரதேச மாநிலம் மற்றும் அக்சய் சின் பகுதியை தனது பிராந்தியத்தின் ஒரு பகுதியாகக் காட்டும் நாட்டின் வரைபடத்தை சீனா அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. தென் சீனக் கடலின் பெரும்பகுதிக்கும் உரிமை கோருகிறது.
லடாக்கில் உள்ள பாங்காங் பள்ளத்தாக்கில் சீனா நுழைந்ததாக ராகுல் காந்தி கூறியது உண்மைதான். மத்திய அரசுக்கு தைரியம் இருந்தால் சீனா மீது துல்லியத் தாக்குதல்(சர்ஜிக்கல் ஸ்டிரைக்) நடத்த வேண்டும்.
ஆனால், பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்டு சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வாழ்த்தினார். அதன்பின், சீனா தன் நாட்டின் வரைபடத்தை வெளியிடுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.