என்னை விட ஒரு ஓட்டு அதிகமாக வாங்கிக் காட்டுங்க பார்க்கலாம்: அண்ணாமலைக்கு சீமான் சவால்!

சீமான் எங்கு போட்டியிட்டாலும் தோற்கத்தானே போகிறார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்த நிலையில், எதிர்த்து நின்று என்னை விட ஒரு ஓட்டு அதிகமாக வாங்கிக் காட்டுங்க பார்க்கலாம் என சவால் விட்டுள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

2024 லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் போட்டியிடப் போவதாக கடந்த சில மாதங்களாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு நிலவி வருகிறது. இதுகுறித்து அண்மையில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட இருப்பதாக கூறுகின்றனர். அப்படி ஒருவேளை அவர் ராமநாதபுரத்தில் போட்டியிட்டால் நான் அவருக்கு எதிராக ராமநாதபுரத்தில் போட்டியிடுவேன்” எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, “சீமான் எங்கு வேண்டுமானாலும் போட்டியிட்டுக் கொள்ளட்டும். அவர் போட்டியிட்டு தோற்கத் தானே போகிறார். வாய் இருக்கிறது பேசுகிறார். எந்த ஊருக்கு போகிறோம் என்ற வழி தெரிந்தால் தான் கடினம். ஆனால் எந்த ஊருக்கு போகிறோம் என்பதே தெரியவில்லை என்றால் எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம் தானே. சீமான் ஜெயிக்க மாட்டோம் என்று தெரிந்த பிறகு எங்கு போட்டியிட்டால் என்ன? திமுகவில் அதிகமான ஊழல்வாதிகள் இருக்கிறார்களே அவர்களை எதிர்த்து சீமான் போட்டியிடட்டுமே? சீமான் திமுகவினரை எதிர்த்து வெற்றி பெற வேண்டுமே தவிர நல்லது செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கின்ற மோடியை எதிர்த்து எதற்கு போட்டியிட வேண்டும்? வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து நிற்க சீமான் தயாரா?” எனக் கேள்வி எழுப்பினார்.

இதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது:-

சரி நான் எங்கே நின்றாலும் தோற்றுப் போய்விடுவேன். தம்பி அண்ணாமலை எங்கே நின்றாலும் வெற்றி பெற்றுவிடுவாரா? அல்லது பாஜக ஜெயித்துவிடுமா? நானாவது ஒரு சிங்கமாக, நேர்மையாக துணிவாக தனியாக நிற்பேன். என்னோடு யார் வேண்டுமானாலும் மோதிக்கொள்ளுங்கள் என்கிறேன். நீங்கள் அப்படி நிற்க முடியுமா? நாட்டை பத்தாண்டுகள் ஆண்டுவிட்டீர்கள். பெரிய கட்சி என்று சொல்கிறீர்களே, வாங்க தனியாக தமிழ்நாட்டில், நீங்களும் நானும் போட்டி போடுவோம். என்னைவிட ஒரு ஓட்டு கூட வாங்கி காட்டுங்க. இல்லை நான் வாங்குகிற ஓட்டைவிட 1 விழுக்காடு ஓட்டு அதிகமாக வாங்கிக் காட்டுங்கள். எதற்கு தேவையில்லாத வெட்டிப் பேச்சு? நீங்க நடையாக நடந்து எடப்பாடி பழனிசாமி வீட்டில்தான் போய் நிற்கப் போகிறீர்கள். அவர் முதுகுக்கு பின்னால் நிற்பீர்களா? இல்லை ஒரு அடி முன்னால் நிற்பீர்களா? அதைச் சொல்லுங்கள். அவர் முதுகுக்கு பின்னால்தான் நிற்கப் போகிறீர்கள்.

நான் நாடாளுமன்றத் தேர்தலில் 40 இடத்திலும் போட்டி போடுவேன். நீங்கள் எத்தனை இடத்தில் போட்டி போடுவீர்கள். வேட்பாளர் வைத்திருக்கிறீர்களா? போட்டி போடுவீர்களா? அதிகபட்சம் போட்டியிட்டால் 7 அல்லது 8 இடங்களில் போட்டியிடுவீர்கள். அதுவே எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு ஏழெட்டு முறை நடையாக நடந்து கெஞ்சி வாங்கவேண்டும். அதுவே அவர் கொடுப்பாரா என்று யோசிக்கவேண்டும். பாஜகவுக்கு எடப்பாடி பழனிசாமி ஒதுக்குகிற சீட்டு எல்லாமே வீண் தானே, அது மிகப்பெரிய பின்னடைவை அவருக்கும் சேர்த்துக் கொடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.