குலக்கல்வி திட்டத்தை ‘விஸ்வகர்மா யோஜனா’ என்ற பெயரில் மத்திய அரசு திணிக்க முயல்வதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
மத்திய அரசு அண்மையில் ‘விஸ்வகர்மா யோஜனா’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இளைஞர்களின் தொழில் திறனை மேம்படுத்துவதற்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதனிடையே, இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட அடுத்த நாள் முதலாகவே இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குலக்கல்வி திட்டத்தை தான் வேறு பெயரில் மத்திய அரசு திணிக்க முயற்சிப்பதாக பல கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
இந்நிலையில், இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
குலக்கல்வி திட்டத்தை நடைமுறைப்படுத்தும் முயற்சி தான் இந்த ‘விஸ்வகர்மா யோஜனா’ திட்டம். குலக்கல்வியின் மறுவடிவமான இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு ரூ.13,000 கோடியை பிரதமர் மோடி ஒதுக்கியுள்ளார். மக்கள் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும்.. இது திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டம் கிடையாது. எந்த தொழிலை யார் விரும்புகிறார்களோ, அவர்களுக்கு அந்த தொழிலை கற்றுக்கொடுப்பது தான் திறன் மேம்பாடு திட்டம்.
ஏற்கனவே பரம்பரை பரம்பரையாக ஒரு தொழிலை செய்து வரும் பிள்ளைகளுக்கு, அதே தொழிலில் பயிற்சி கொடுப்பது தான் இந்தத் திட்டத்தின் நோக்கம். அதாவது, முடி வெட்டும் தொழிலை பரம்பரை தொழிலாக வைத்திருக்கும் பிள்ளைகளுக்கு முடி வெட்ட பயிற்சி கொடுப்பார்கள். செருப்பு தைக்கும் தொழிலை குலத் தொழிலாக கொண்டிருக்கும் பிள்ளைகளுக்கு அந்த தொழிலில் பயிற்சி கொடுப்பார்கள். சாதி ரீதியாக ஏற்றத்தாழ்வுக்கு அடிப்படையான இந்த குலத்தொழிலை தான் அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்கள் எதிர்த்தார்கள். ஆனால், இன்றைக்கு வேறு பெயரில் இந்தத் திட்டத்தை மக்களிடையே திணிக்க முயல்கிறது பாஜக. இதில் பெரிய ஆபத்து என்னவென்றால், 18 வயது நிறைவடைந்ததும் இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் கடனுதவி வழங்கப்படும். அதாவது பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரிகளுக்கு செல்லும் பிள்ளைகளை தடுத்து அவர்களுக்கு பணம் வழங்கி குலத்தொழிலை கற்றுக்கொடுப்பதுதான் பாஜகவின் நோக்கம். எக்காரணம் கொண்டும் இந்தத் திட்டத்தை தமிழகத்திற்குள் நுழைய நாங்கள் விட மாட்டோம். இவ்வாறு திருமாவளன் கூறினார்.