சமையல் எரிவாயு விலை குறைப்பானது தேர்தலுக்கான அறிகுறி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, 5 இடங்களில் மழைநீர் உறிஞ்சும் பூங்காக்கள், தணிகாசலம் நகர் கால்வாயில் திறந்த மற்றும் மூடிய நீர்வழித்தடம் மற்றும் தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மண்டல உதவி ஆணையர் அலுவலகக் கட்டடம் ஆகிய பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ளதால் இந்த பணிகளை விரைந்து முடிக்க முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
தொடர்ந்து, செய்தியாளர்களின் கேள்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார். இந்தியா கூட்டணி 28 கட்சிகளுடன் உயர்ந்திருக்கிறது. அதை எப்படி பார்க்கிறீர்கள்? என்ற கேள்விக்கு, அது இன்னும் உயர்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்தார்.
கேஸ் விலை குறைப்பு, இந்தியா கூட்டணிக்கான நெருக்கடியா? என்ற கேள்விக்கு, இல்லை, இல்லை, அது தேர்தல் நெருங்குவதற்கான ஒரு அறிகுறி என்றும், பெட்ரோல், டீசல் விலை கூட குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறதா? என்ற கேள்விக்கு ஆச்சரியமில்லை! என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.