தமிழகத்தில் 20 சுங்கச் சாவடிகளில் செப்டம்பர் 1 முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுவதை திரும்ப பெறாவிட்டால் தேமுதிக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் திண்டுக்கல், திருச்சி, சேலம், மேட்டுப்பட்டி, உளுந்தூர்பேட்டை, மதுரை, தூத்துக்குடி உள்பட 20 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1ஆம் தேதி நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுவதாக வெளியான தகவலுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஏற்கெனவே விலைவாசி உயர்வால் பொதுமக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலையில் சுங்கக் கட்டணத்தை உயர்த்தினால் அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும். இதனால் ஏழை, எளிய நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாமலும் தேசிய நெடுஞ்சாலைகளை முறையாக பராமரிக்காமலும் சுங்க கட்டணத்தை மட்டும் உயர்த்துவது எந்த வகையில் நியாயம்.
உடனடியாக சுங்க கட்டண உயர்வை திரும்ப பெறுவதுடன் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், காலாவதியான சுங்க சாவடிகளில் கட்டண வசூலை நிறுத்த வேண்டும். சுங்க சாவடி கட்டண உயர்வு தொடர்பான அறிவிப்பை திரும்ப பெறவில்லை என்றால் அனைத்து சுங்கச் சாவடிகளை முற்றுகையிட்டு தேமுதிக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.