அதானி ஊழல் விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை: காங்கிரஸ்

நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை மட்டுமே அதானியின் மெகா ஊழல் முழுவதையும் விசாரிக்க முடியும் என்று ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:-

அதானி மெகா ஊழல் தொடர்பான செபி விசாரணை அறிக்கை குறித்து பல்வேறு செய்திகள் வந்துள்ளன. இந்த அறிக்கைகள் சரியானதாக இருந்தால் மற்றும் தொழில்நுட்ப மீறல்களுக்காக அதானி நிறுவனத்துக்கு சிறிய அபராதத்தை விதிப்பதற்கு செபி திட்டமிட்டால், சுயவளர்ச்சிக்காக பொய் கூறும் அரசியலமைப்பு முழுமை அடையும். பிரதமர் மோடி தனது ஊழல் நண்பர்கள் மற்றும் அவர்களின் தவறான செயல்களை பாதுகாப்பதற்காக தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளார்.

பணமோசடி போன்ற கடுமையான குற்றச்சாட்டுக்களை காட்டிலும், கடந்த ஜனவரியில் அதானி நிறுவன பங்குகளை விற்ற நிறுவனங்களை பிரதமரின் செல்ல விசாரணை அமைப்புகள் விசாரித்து வருகின்றன. அதானி நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அமலாக்க துறை அல்லது சிபிஐயை எப்போதுமே செபி கேட்கவில்லை. ஆனால் எதிர்கட்சிகள் மற்றும் பாஜ அல்லாத மாநில அரசுகளை துன்புறுத்துவதற்கு அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ பயன்படுத்தப்படுகின்றது. சமரசம் செய்யப்பட்ட முகமைகளை காட்டிலும் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை மட்டுமே அதானியின் மெகா ஊழல் முழுவதையும் விசாரிக்க முடியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.