முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிரான வழக்கை தாமாக முன்வந்து விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
2001ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரை நடைபெற்ற அதிமுக ஆட்சியில் முதலமைச்சராகவும், வருவாய் துறை அமைச்சராகவும் இருந்த ஓ.பன்னீர் செல்வம் வருமானத்திற்கு அதிகமாக 1.72 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தேனி நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் 2012ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் இந்த வழக்கை தாமாக முன் வந்து விசாரிக்கப் போவதாக எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவித்துள்ளார்.
ஏற்கெனவே திமுகவை சேர்ந்த அமைச்சர்கள் பொன்முடி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்ட அமைச்சர்களை சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து கீழமை நீதிமன்றங்கள் விடுதலை செய்ததற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தாமாக முன் வந்து மேல்முறையீடு செய்து விசாரணைக்கு எடுத்த நிலையில் தற்போது நான்காவதாக அதிமுகவில் முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் மீதான வழக்கை மீண்டும் விசாரிக்கப்போவதாக அறிவித்துள்ளார்.
ஓ.பன்னீர் செல்வம், அவரது மனைவி, மகன்கள், மகள், சகோதரர்கள் பெயரில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து வாங்கியதாக தொடர்ந்த வழக்கில் ஓ.பி.எஸ். உள்ளிட்டோர் மீது தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இருந்து ஒ பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டிருந்தனர். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது.