ஆளுங்கட்சியின் விருப்பப்படி லஞ்ச ஒழிப்புத் துறை செயல்படுகிறது: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்!

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் விடுவித்ததை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்த நிலையில் அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஆளுங்கட்சியின் விருப்பப்படி லஞ்ச ஒழிப்புத் துறை செயல்படுகிறது என்று கூறினார்.

வருமானத்துக்கு அதிகமாக 1.77 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக, ஒ.பி.எஸ் உளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்த வழக்கை விசாரித்த, சிவகங்கை மாவட்ட சிறப்பு நீதிமன்றம், 2012 ஆம் ஆண்டில் அனைவரையும் வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டது. இந்த வழக்கை மறு ஆய்வுக்கு எடுத்த உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வழக்கில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை நடைமுறைகள் குறித்து கடுமையாக குற்றம் சாட்டினார். குற்ற வழக்கு விசாரணை நடைமுறை கேலிக்கூத்தாக்கப்பட்டு உள்ளது என்றும், எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு சட்டம் பொருந்தாது என அறிவித்து விடலாம் எனவும் நீதிபதி சாடினார்.

மேலும், அதிகார வரம்பு இல்லாத தலைமை குற்றவியல் நடுவர் மன்றத்துக்கு, உயர்நீதிமன்றம் வழக்கை மாற்றி உள்ளதாகவும், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளில் பின்பற்றப்படும் நடைமுறையில் பிரச்சனைகள் உள்ளதாகவும் குறிப்பிட்ட நீதிபதி, ஆளுங்கட்சியின் விருப்பப்படி லஞ்ச ஒழிப்புத் துறை செயல்படுவதாக கூறினார். லஞ்ச ஒழிப்புத் துறை அரசியலில் இருந்து விலகி செயல்பட வேண்டும் என்றவர், 2012ல் பிறப்பித்த உத்தரவை தற்போது மறு ஆய்வு செய்வதில் எந்த தவறும் இல்லை என்று கூறினார்.

லஞ்ச ஒழிப்பு துறை பச்சோந்தியாக மாறி விட்டது என்றும், ஆட்சிக்கு ஏற்றார் போல் தன்னை மாற்றி கொள்வதாக லஞ்ச ஒழிப்புத்துறை மீது குற்றம் சுமத்திய நீதிபதி, லஞ்ச ஒழுப்பு துறை கொண்டு வந்ததற்கான நோக்கமே சிதைந்து விட்டதாக தெரிவித்தார். இதற்கு நீதிமன்றங்களும் துணைபோவதாக கூறிய நீதிபதி, வருமானத்துக்கு அதிகமாக 372% சொத்து சேர்த்ததாக அறிக்கை தாக்கல் செய்த லஞ்ச ஒழிப்பு துறை பிறகு புகாரில் முகாந்திரம் இல்லை என தெரிவித்ததை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறினார். மேலும், ஓ.பி.எஸ் மீது வழக்கு தொடர அனுமதி தந்ததை திரும்ப பெற்று கொள்வதாக சபாநாயகர் தெரிவித்தது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என்றும், சபாநாயகர் தன்னை நீதிபதிபோல் கருதி முடிவெடுக்க முடியாது எனவும் நீதிபதி கருத்து கூறினார். இதேபோல, வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்ட உத்தரவுகள் அனைத்தும் மறு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வழக்கு விசாரணையின் போது தெரிவித்தார்.

சொத்து குவிப்பு வழக்குகளில் இருந்து திமுக அமைச்சர்கள் விடுவிக்கப்பட்ட வழக்குகளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மறு ஆய்வுக்கு எடுத்து விசாரித்து வருகிறார். இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் மீதான வழக்கையும் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நிலையில், விடுவிக்கப்பட்ட அனைத்து வழக்குகளும் விசாரணைக்கு எடுக்கப்படும் என்று அவர் கூறியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.