சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்தி ஏழை, எளிய மக்களை மத்திய அரசு சுரண்டுகிறது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் 63 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச் சாவடிகளில் ஆண்டுக்கு ஒரு முறை 5 விழுக்காட்டில் இருந்து 10 விழுக்காடு வரை கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்படுகிறது. ஒன்றிய அரசின் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தபடி, 1992ம் ஆண்டு போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மாதமும், 2008ம் ஆண்டு போடப்பட்ட சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதன்படி, தமிழ்நாட்டில் இரண்டு கட்டங்களாக சுங்கக் கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்படுகிறது. அதில் ஏப்ரல் மாதம் 29 சுங்கச்சாவடிகளுக்கும் செப்டம்பர் மாதம் மீதமுள்ள 26 சுங்கச் சாவடிகளுக்கும் ஆண்டுதோறும் கட்டணம் உயர்த்திக்கொள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதித்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் 26 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் இன்று நள்ளிரவு முதல் உயர்த்தப்பட இருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது. தென் மாநிலங்களில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் நடந்த கட்டண வசூலில் ரூ.132 கோடி முறைகேட்டை சிஏஜி அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. இதில், தமிழ்நாட்டில் இருக்கும் பரனூர் சுங்கச்சாவடியும் ஒன்று. இந்த ஒரே ஒரு சுங்கச்சாவடியில் மட்டும் 6.5கோடி ரூபாய் முறைகேடாக வசூலித்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் 26 சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் உயர்த்தப்பட இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, கேரளா ஆகிய தென்மாநிலங்களில் சுங்கக் கட்டண வசூல், சிஏஜி ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட 2017-18 நிதியாண்டு முதல் 2020-21 நிதியாண்டு வரை ரூ.28,523.88 கோடி வசூல் ஆகியுள்ளது. நாடு முழுவதுமான வரி வசூலில் இது சுமார் 28 விழுக்காடாகும். இதில், தமிழ்நாட்டில் மட்டும் ஆண்டுக்கு ரூ.2,400 கோடி வசூலாகியுள்ளது என சிஏஜி அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. இதற்கு அடுத்ததாக ஆந்திராவில் ரூ. 1,950 கோடி, கர்நாடகாவில் ரூ.1,830 கோடி சுங்கக் கட்டணமாக வசூல் ஆகியுள்ளது. இப்படி தென்மாநிலங்களிலேயே அதிகமாக வசூல் அள்ளித்தரும் தமிழ்நாட்டை குறிவைத்து சுங்கக் கட்டணத்தை ஒன்றிய அரசு உயர்த்தி வருவது ஏற்றுக்கொள்ள முடியாது.
பெட்ரோல், டீசலுக்கான விலையை உயர்த்தி கோடிக்கணக்கில் மக்களின் பணத்தை கொள்ளை அடிக்கும் ஒன்றிய அரசு, சுங்க கட்டணத்தை மேலும் மேலும் உயர்த்துவதன் மூலம் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். ஏற்கெனவே, கடுமையான விலைவாசி உயர்வு, வேலையின்மையால் சாதாரண ஏழை, எளிய நடுத்தர மக்கள் துயரங்களைச் சந்தித்து வரும் நிலையில், இந்த சுங்க கட்டண உயர்வால் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் கடுமையாக உயரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. வணிகர்கள், வாகன உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
இந்தியாவிலேயே, தமிழ்நாட்டில்தான் அதிகமாக 63 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில் காலாவதியான 32 சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்டு அரசியல் கட்சிகளும், ஜனநாயக இயக்கங்களும் தொடர்ந்து போராடி வருகின்றன. மேலும், காலாவதியான சுங்கச்சாவடிகளையும், மாநகராட்சி எல்லைக்குள் இருக்கும் சுங்கச்சாவடிகளையும், நகர்ப்புறத்தில் இருக்கும் சுங்கச்சாவடிகளையும், 60 கி.மீ குறைவாக இருக்கும் சுங்கச்சாவடிகளையும், நகர்ப்புறத்தில் இருக்கும் சுங்கச்சாவடிகளையும் அகற்ற வேண்டுமென சட்டமன்றத்தில் நான் வலியுறுத்தி பேசியிருந்தேன். பிற சட்டமன்ற உறுப்பினர்களும் பேசியிருந்தனர். அதன் அடிப்படையில், காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்றுவதற்கு, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ வேலு, கடிதம் வாயிலாகவும் நேரடியாகவும், ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தியிருந்தார். ஆனால், அக்கோரிக்கையின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத ஒன்றிய அரசு, சுங்கச்சாவடி உரிமையாளர்களோடு கை கோர்த்துக் கொண்டு கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்டு வருவது கடும் கண்டத்திற்குரியது.
எனவே, ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ள சுங்க கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் காலவதியாகியுள்ள 32 சுங்கச் சாவடிகளையும், 60 கி.மீ. தூரத்திற்கு குறைவாக இருக்கும் சுங்க சாவடிகளையும், நகர்புறத்தில் இயங்கும் சுங்கச் சாவடிகளையும், மாநகராட்சி எல்லைக்குள் இருக்கும் சுங்குச்சாவடிகளையும் உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது. இவ்விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு, சுங்கச்சாவடி கட்டண உயர்வை தடுத்து நிறுத்த வேண்டும். மேலும், காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற, ஒன்றிய அரசுக்கு போதிய அழுத்தம் தர வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு வேல்முருகன் கூறியுள்ளார்.