கலைஞர் காலத்தில் நடைபெறாததெல்லாம் ஸ்டாலின் காலத்தில் நடைபெறுவதன் மூலம் தமிழகம் இனி அமைதி பூங்காவாக இருக்கப் போவதில்லை என்று ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.
ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று காலை கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள கவுமார மடாலயம், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகளிடம் ஆசி பெற்று மரக்கன்றுகளை நட்டு வைத்தார். பின்னர் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தி.மு.க. அரசு காலம் காலமாக ஒன்றைத்தான் செய்து வருகிறது. தவறான முன்னுதாரணங்களை ஏற்படுத்துவதும், தவறான முன்னுதாரணங்களை உதாரணமாக காட்டி மேலும் மேலும் தவறுகளை செய்வதும் தான் திமுக அரசின் சாதனையாக உள்ளது. கலைஞர் காலத்தில் நடைபெறாததெல்லாம் ஸ்டாலின் காலத்தில் நடைபெறுவதன் மூலம் தமிழகம் இனி அமைதி பூங்காவாக இருக்கப் போவதில்லை. அராஜகம் செய்பவர்களின் கைகளில் அடங்கிப் போகிற மாநிலமாக ஆகிவிடுமோ என்ற அச்சம் நல்லுணர்வு படைத்த அத்தனை தமிழ் நெஞ்சங்களிலும் இருக்கிறது.
ராஜீவ் காந்தியை கொன்றவர்களை கட்டி அணைத்தார். அப்போது அவர் ஒரு செய்தி சொல்கிறார். எந்தத் தவறு இன்றைக்கு நாம் செய்கிறோமோ, அந்த தவறு மீண்டும் நம்மை வந்து தாக்கும். அதுதான் கர்மா. இன்றைக்கு ஸ்டாலின் எந்த தவறுகளை செய்கின்றாரோ அந்த தவறுகளுக்குரிய விலையை அவர் நிச்சயமாக கொடுக்க வேண்டியது இருக்கும். ராஜீவ் காந்தி என்பவரை காங்கிரஸ் தலைவராக பார்க்க கூடாது. அவர் தேசிய தலைவராக தான் இந்த மண்ணில் இறந்தார். காலை உணவு திட்டத்தால் பள்ளிகளில் உணவுகள் வீணாவதாக எழுந்த புகார் குறித்த கேள்விக்கு குழந்தைகளுக்கு என்ன வேண்டுமோ அதை தருவதற்கு அரசு முயல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.