ஸ்டாலினுக்கு முதுகெலும்பு இருந்தா காங்கிரஸ் கூட்டணியை விட்டு விலகுங்க: நாராயணன் திருப்பதி

முதுகெலும்பு இருந்தால், காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியேறுங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி சவால் விடுத்துள்ளார்.

செப்டம்பர் மாதம், திமுக சார்பில் திராவிட மாதமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் நடத்தப்படும் எக்ஸ் ஸ்பேஸ் கலந்துரையாடலில் நேற்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, கட்சியினருக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கிய ஸ்டாலின், அதிமுக – பாஜகவையும் சரமாரியாக விமர்சித்தார். வலைதளங்களில் அதிமுக பாஜக பொய் செய்திகளை பரப்புவதற்காகவே வேலைக்கும், கூலிக்கும் ஆட்களை வைத்துள்ளனர். அதிமுகவுக்கு கொள்கை இல்லை. கொள்கை சார்ந்த விஷயம் இல்லை. கள்ள கூட்டணியில் உள்ள கூட்டணியில் உள்ள இவர்கள் பரப்பும் பொய்களுக்கு ஆயுள் குறைவு. நமது கொள்கைக்கு ஆயுள் அதிகம். இதனால் தான் 6வது முறையாக ஆளும் வாய்ப்பு கிடைத்துள்ளது எனப் பேசினார்.

முதல்வர் ஸ்டாலின் இந்தப் பேச்சு பாஜகவினரை கொதிக்க வைத்துள்ளது. இதுதொடர்பாக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

‘கள்ள கூட்டணியில் உள்ள கூட்டணியில் உள்ள இவர்கள் பரப்பும் பொய்களுக்கு ஆயுள் குறைவு. நமது கொள்கைக்கு ஆயுள் அதிகம். இதனால் தான் 6வது முறையாக ஆளும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் தொடர்ந்து கொள்கைகளை பரப்ப வேண்டும். இதை செய்தால் 40ம் நமதே நாடு நமதே என வசப்படும்’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். எது கள்ளக் கூட்டணி? தமிழகத்திற்கு தண்ணீர் தரமாட்டோம் என்பவர்களுடன் கள்ள உறவு வைத்திருப்பவர்களே கள்ளக் கூட்டணியின் கதாநாயகர்கள். முதுகெலும்பிருந்தால், தைரியமிருந்தால் காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியேறுங்கள்.

16 தேர்தல்களில் 10 தோல்விகளை சந்தித்த கட்சி என்ற ஒப்புதல் வாக்குமூலத்தை அளித்துள்ளீர்கள். நீதிக்கட்சியின் நீட்சியாக செயல்பட்டு கொண்டிருப்பதாக நீங்களே தெரிவித்ததால் உங்கள் கொள்கைகளை மக்கள் தோற்கடித்து கொண்டே இருப்பதாக தான் பொருள். திமுகவை பலமாக எதிர்க்கும் கட்சிக்கே மக்கள் வாக்களிக்கிறார்கள் என்பதே தமிழ்நாட்டின் அரசியல். பாஜக கடுமையாக எதிர்க்கிறது. படுதோல்வியை திமுக தழுவும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பாஜகவுக்கே பெரும் வெற்றி கிட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.