குறைக்கப்பட வேண்டியது வந்தே பாரத் ரயிலின் பயணக்கட்டணமே தவிர, மற்ற ரயில்களின் வேகத்தை அல்ல: உதயநிதி

தமிழகத்திற்கு அடுத்தடுத்து ‘வந்தே பாரத்’ ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு வரும் நிலையில், இதுதொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தமிழக மக்கள் மத்தியில் இன்றைக்கு பேசுபொருளாக மாறியிருப்பது ‘வந்தே பாரத்’ ரயில்கள் தான். இந்தியாவில் இதுவரை பல வழித்தடங்களில் 25 ‘வந்தே பாரத்’ ரயில்கள் ஓடும் நிலையில், தமிழகத்திற்கு அடுத்தடுத்து ‘வந்தே பாரத்’ ரயில்கள் அறிமுகமாகி வருகின்றன. ஏற்கனவே சென்னை சென்ட்ரல் டூ மைசூரு, சென்னை சென்ட்ரல் டூ கோவை என இரண்டு வந்தே பாரத் ரயில்கள் இருக்கும் நிலையில், தற்போது சென்னை டூ நெல்லை வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்தி இருப்பது மக்களின் வரவேற்பை பெற்றிருக்கிறது.
இது மகிழ்ச்சியான செய்திதான் என்றாலும், இந்த சென்னை டூ நெல்லை வந்தே பாரத் ரயில் வந்தது முதலாக பல எக்ஸ்பிரஸ் ரயில்களின் நேரம் மாற்றப்பட்டிருக்கிறது. குறிப்பாக, வைகை எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களின் நேரம் வெகுவாக மாறியிருக்கிறது. அதுமட்டுமின்றி, பல ரயில்களின் வேகமும் குறைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இதுபற்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:-

தமிழ்நாட்டில் வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்தப்பட்ட ஓரிரு நாட்களிலேயே சாமானிய மக்கள் பயணிக்கக்கூடிய பொதிகை, பல்லவன், நெல்லை உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகம் குறைக்கப்பட்டுள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.

பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயப்படுத்துவது அல்லது முற்றிலுமாக சிதைப்பது எனும் ஒன்றிய அரசின் தொடர் நடவடிக்கையின் மற்றொரு வடிவமாகவே மக்கள் இதனை பார்க்கின்றனர். குறைக்கப்பட வேண்டியது வந்தே பாரத் ரயிலின் பயணக்கட்டணமே தவிர, சாமானிய மக்கள் பயணிக்கும் மற்ற ரயில்களின் வேகத்தை அல்ல என்பதை ஒன்றிய அரசு புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.