காவிரி நதிநீர் பிரச்சினையில் தி.மு.க. அமைதியாக இருப்பது ஏன்?: சீமான்

“மொழியை இழந்ததால் நம் அடையாளத்தை இழந்துவிட்டோம். அதனால்தான் இன்றைக்கு அந்நியர்கள் தமிழனை நடுவீதியில் வைத்து அடிக்கின்றனர்” என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

கடலூரில் நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் சீமான் பேசியதாவது:-

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடுகிறது. ஒரே நாடு என்று பேசுகிறவர்கள், ஒரே தண்ணீர் என்று ஏன் பேசுவதில்லை. ஒரே நாட்டுக்குள் தண்ணீர் கேட்டால் அடித்து விரட்டுகிறார்கள் என்றால், இது பக்கத்து மாநிலமா அல்லது பகை நாடா. கர்நாடக அரசுக்கு எதிராக நான் தொடர்ந்து போராடி வருகிறேன். அவர்கள் கூட்டணியில் உள்ளனர். காங்கிரசை எதிர்த்து தி.மு.க. போராட வேண்டும். அதே காங்கிரசை கூட்டி வந்து ஓட்டு கேட்டால் எனக்கு பதில் சொல்ல வேண்டும்.

தேர்தல் அரசியலுக்காக ஒரு தேசிய இனத்தின் உரிமையை பறி கொடுக்க தயாராகி விட்டனர். காங்கிரசும், பா.ஜ.க.வும், அந்த மாநில தேர்தலுக்காக தமிழக உரிமையை பறிகொடுக்க தயாராகி விட்டனர். காவிரி நதி நீர் பிரச்சினைக்காக வருகிற 8-ந் தேதி மிகப்பெரிய பேரணி வைத்து போராடுவேன்.

பரந்தூரில் விமான நிலையம், கடலில் பேனா சிலை வைக்க நான் விடமாட்டேன். கடவுள் மறுப்பு, பெரியார் என்பது நான் வழி நடந்த பாதை, இப்போது நான் வழி நடத்தும் பாதை. இதில் வழிபாடு வரும். இதில் கொள்கை முரண்பாடு என்பதே கிடையாது. இந்து மத எதிர்ப்பு, காங்கிரசை ஒழிப்பது தான் பெரியார் கொள்கை. ஆனால் அதை தி.மு.க. செய்கிறதா? அன்று இந்தி தெரியாது போடா என்று எதிர்த்த தி.மு.க. தற்போது அவர்களது ஐ.டி. பிரிவுக்கு இந்தி எழுத, படிக்க தெரிந்த நபர்கள் தேவை என்று கூறுகிறது. காவிரி நதிநீர் பிரச்சினையில் தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது, மு.க.ஸ்டாலின் ரெயில் மறியல் போராட்டம் நடத்தினார். ஆனால் தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும் போது, அமைதியாக இருப்பது ஏன்?.

எங்கே இருக்கிறது தமிழ் மொழி. உன் தெருவில் வெச்சிருக்கியா. இல்லை கடைத்தெருவுல வெச்சிருக்கியா. அவ்வளவு ஏன்.. உன் நாக்கில் வெச்சிருக்கியா? நாக்கில் இருக்கிறதா? நாக்கில் வாழாத தமிழ், நாட்டில் வாழும் என்று எப்படி நம்பினாய்? தமிழுக்கு மாநாடு நடத்துனா தமிழ் வாழ்ந்துருமா? ஏட்டில் இல்லாத தமிழ்; நாட்டில் இல்லாத தமிழ்; தமிழன் வீட்டில் இல்லாத தமிழ்; தமிழன் நாக்கில் இல்லாத தமிழ், எப்படி மாநாட்டில் வாழும். ஒரு நாள் ஒன்றாக கூடி அமர்ந்து, தமிழ் அப்படிப்பட்டது, தமிழ் இப்படிப்பட்டது என்று பேசினால் தமிழ் வளர்ந்துவிடுமா?

மொழியை இழந்தாய், தொலைத்தாய்.. உன் அடையாளத்தை சிதைய விட்டாயே. அவ்வளவுதான் முடிஞ்சிருச்சி. முகம் சிதைந்தால் என் பிணத்தை அடையாளம் காட்ட முடியாது. மொழி சிதைந்தால் உன் இனத்தை அடையாளம் காட்ட முடியாது. இன்றைக்கு எந்த தமிழனாவது தமிழை ஒழுங்காக பேசுகிறானா? ரெண்டு வார்த்தை தமிழ் பேசுறதுக்குள்ள But, Actually என்று 20 ஆங்கில வார்த்தைகள் வந்துவிடுகிறது. so என்று சொல்லவில்லை என்றால் சோறு உள்ளே இறங்காது.

இப்படி இருந்தால் எப்படி தமிழ் வாழும்? BUT BUT BUT என சொல்லி சொல்லி என் தமிழ்மொழி ‘பட்டே’ போய்விட்டது. மொழி செத்தததால் இனம் செத்துருச்சி. இனம் செத்ததால மானம் செத்துருச்சி. மானம் செத்ததால் தான் இன்றைக்கு கண்ட கண்டவன் எல்லாம் நம்மை நடு வீதியில் வைத்து அடித்துக் கொண்டிருக்கிறான். இவ்வாறு சீமான் பேசினார்.