பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை எதிர்த்துப் போராடிய மக்கள் மீது வழக்குப் பதிவு: சீமான் கண்டனம்!

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை எதிர்த்துப் போராடிய மக்கள் மீது வழக்குப் பதிவு செய்திருப்பது எதேச்சதிகாரப்போக்கின் உச்சமாகும் என்று சீமான் விமர்சித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் சுமார் 4 ஆயிரத்து 70 ஏக்கர் பரப்பளவில் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் விமான நிலையம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. ஆண்டிற்கு 10 கோடி விமான பயணிகளை கையாளும் வகையில் இந்த விமான நிலையத்தை அமைக்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்தினால் விவசாயம் பாதிக்கப்படும் என்று கூறி, கிராம மக்கள் கடந்த ஓராண்டிற்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய ஐ.ஐ.டி. பேராசிரியர் மச்சேந்திரநாதன் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு கள ஆய்வு செய்ய எதிர்ப்பு தெரிவித்து, 200க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை கைது செய்த காவல்துறையினர் வல்லக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். மேலும், அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போராடிய மக்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

பரந்தூரில் புதிய பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைப்பதனை எதிர்த்துப் போராடிய அப்பகுதி மக்கள் 138 பேர் மீது திமுக அரசு மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. மக்களின் தொடர் கோரிக்கையினை மதிக்காமல் வானூர்தி நிலையம் அமைப்பதற்கான ஆய்வுகளை மேற்கொள்ளத் தொடங்கியதைக் கண்டித்து மக்களாட்சியின் அடிப்படை உரிமையான அறவழியில் போராடும் மக்கள் மீது வழக்கு, கைது என்று அடக்குமுறைகளை ஏவி, அச்சுறுத்துவது கொடுங்கோன்மையாகும்.

மண்ணுக்கும், மக்களுக்கும் எதிரான அழிவுத் திட்டங்களைத் தொடர்ந்து மக்கள் எதிர்த்து வரும் நிலையில், எதிர்க்கட்சியாக இருந்தபோது மக்களோடு நிற்பது போல் நாடகமாடிய திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு அதே மக்களினுடைய கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நெரிப்பதற்குப் பெயர்தான் திராவிட மாடலா? இதுதான் ‘எல்லார்க்கும் எல்லாம்’ கிடைக்கச் செய்கின்ற சமூக நீதியா? நிலங்களை வழங்க மறுக்கும் விவசாயிகளை மிரட்டி திமுக அரசு அச்சுறுத்துவதும், வெளியில் வரமுடியாதபடி காவல்துறையைக் கொண்டு அடைத்து வைப்பதும், கைது செய்து சிறைப்படுத்துவதும் எதேச்சதிகாரப்போக்கின் உச்சமாகும். இதே அடக்குமுறைகள் தொடர்ந்தால் அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அப்பகுதி மக்கள் தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசிற்கும், மத்தியில் ஆளும் பாஜக அரசிற்கும் தக்க பாடம் புகட்டுவார்கள்.

ஆகவே, தங்களின் நிலங்களைத் தர மறுத்து, பரந்தூர் புதிய வானூர்தி நிலையத்திற்கு எதிராகப் போராடும் மக்களைக் கைது செய்யும் போக்கினை திமுக அரசு நிறுத்துவதோடு, அம்மக்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். மேலும், வேளாண் விளைநிலங்களையும், நீர்நிலைகளையும், மக்களின் குடியிருப்புகளையும் அழித்து பரந்தூரில் புதிய வானூர்தி நிலையம் அமைப்பதற்குத் துணைபோவதையும் திமுக அரசு கைவிட வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.