தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக வேல்முருகன் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-
தமிழக வாழ்வுரிமைக் கட்சியை பொறுத்தவரை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஏனென்றால், சாதிவாரிக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டால்தான், பிற்படுத்தப்பட்ட – மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் குறிப்பான சிக்கல்களைக் கண்டறிந்து அவற்றை நீக்குவதற்காக திட்டமிட முடியும். பல்வேறு படிநிலைகளில் ஏற்றத்தாழ்வாக உள்ள சாதிகளிடையே உள்ள உண்மையான சிக்கல்களை தீர்த்தால்தான், சாதிகளிடையே சமநிலையை உருவாக்க முடியும். அதுதான் சாதி ஒழிப்புக்கான முக்கியமான படிநிலையாகும். ஆனால், 2010 இல் இருந்தே, பாஜகவின் தலைமை அமைப்பான ஆர்.எஸ்.எஸ். சாதிவாரிக் கணக்கெடுப்பை எதிர்த்து வருகிறது. அதற்கான உண்மையான காரணம் – சாதி ஒழிப்பு நோக்கமோ, நடைமுறைச் சிக்கலோ அல்ல. பிற்படுத்தப்பட்ட – மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதி மக்களின் உண்மையான தொகை தெரியுமானால், இப்போதுள்ள 50 விழுக்காடு என்ற இடஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பு நீடிக்க முடியாது என்றும், ஆதிக்கசாதியினருக்கான 10 விழுக்காடும் அடிபட்டுப் போகும் என்றும் ஆரியத்துவ ஆர்.எஸ்.எஸ். அஞ்சுகிறது. இன்னொருபுறம், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தினால், இந்தியாவில், பிற்படுத்தப்பட்ட – மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மக்களின் எண்ணிக்கை ஆதாரத்துடன் நிலை நிறுத்தப்பட்டுவிடும். அது, பா.ஜ.க-வின் இந்துத்துவா திட்டத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இந்த சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மறுக்கும் வகையில், 23.09.2021இல், மராட்டிய மாநில அரசு மற்றும் சிலர் தொடுத்திருந்த வழக்கில், இந்தியாவில் 40 இலட்சத்திற்கும் மேற்பட்ட சாதிகள், துணை சாதிகள், சாதிக் குழுக்கள் இருக்கின்றன. இவற்றுள் பட்டியல் சமூகத்தினரைத் தவிர பிறரைக் கணக்கெடுப்பது நடைமுறை சாத்தியமற்றது. எனவே, சாதிவாரிக் கணக்கெடுப்பை மேற்கொள்ள முடியாது என மோடி அரசு, உச்சநீதிமன்றத்தில் சப்பை காரணங்களை கூறி பிடிவாதமாக மறுத்து வந்தது. இந்நிலையில், மோடி அரசின் உள்நோக்கமுள்ள இந்த முடிவை புறம் தள்ளி விட்டு, மோடி அரசுக்கும், நாட்டிற்கும் வழிகாட்டும் வகையில், பீகார் அரசு மாநில அளவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அதன் முடிவுகளையும் வெளியிட்டிருப்பது வரவேற்கதக்கது ; பாராட்டுக்குரியது. அந்த விபரங்கள் இந்திய சமூக அமைப்பில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினர் ஆகியோரின் எண்ணிக்கை மிகப் பெருவாரியாக இருப்பதை மிகத் தெளிவாக உணர்த்துகிறது.
சாதிவாரியாக வெளியாகியுள்ள விபரங்களின்படி, யாதவர்கள் 14.26 விழுக்காடு, ரவிதாஸ் மற்றும் சாமார்கள் 5.2 விழுக்காடு, கோயரி 4.2 விழுக்காடு, பிராமணர்கள் 3.65 விழுக்காடு, ராஜபுத்திரர் 3.4 விழுக்காடு, முசார் 3.08 விழுக்காடு, பூமிகார் 2.86 விழுக்காடு, குர்மி 2.8 விழுக்காடு, மல்லா 2.60 விழுக்காடு, பனியா 2.31 விழுக்காடு, காயாஸ்த் 0.60 விழுக்காடு என தெரிய வந்துள்ளது. இதன்படி கணக்கிட்டால் பிற்படுத்தப்பட்டவர்கள் 27 விழுக்காடு, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் 36 விழுக்காடு, பட்டியலினத்தவர் 19 விழுக்காடு, பழங்குடியினர் 1.6 விழுக்காடாகும். அதே நேரத்தில், பொதுப் பிரிவினர் 15.5 விழுக்காடு மட்டுமே இருப்பது தெரிய வந்திருக்கிறது. தற்போது பீகாரில் பட்டியல் சமூகத்திற்கு 16 விழுக்காடு, பழங்குடியினருக்கு 1.68 விழுக்காடு, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 12 விழுக்காடு, பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 18 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. 63 விழுக்காடு உள்ள பிற்படுத்தப்பட்டோர் 30 விழுக்காடு இடத்தை மட்டுமே இப்போது பெறுகின்றனர். 15.5 விழுக்காடு உள்ள பொதுப் பிரிவினர் 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அனுபவித்து வருவது, சாதிவாரி கணக்கெடுப்பில் அம்பலப்பட்டுள்ளது. இதே நிலை தான் தமிழ்நாட்டிலும் நிலவுகிறது. இது மாபெரும் சமூக அநீதியாகும். அதிக எண்ணிக்கையில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினருக்கு நியாயமாக சென்றடைய வேண்டிய சமூக நீதி, சாதிவாரி கணக்கெடுப்பின் மூலமே உறுதி செய்யப்படும். எனவே, தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களிலும், வேலைவாய்ப்புகளிலும் வழங்கப்படும் இட ஒதுக்கீட்டின் வரம்பை அதிகரிப்பதற்கும் சாதிவாரி கணக்கெடுப்புதான் உதவும்.
எனவே, தமிழ்நாடு அரசு, சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்தப்பட வேண்டும். மேலும், பீகார் மாநில அரசு மேற்கொண்டிருப்பதைப் போன்று, பட்டியல் பிரிவினருக்கும், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும், பதவி உயர்வில் இட ஒதுக்கீடும், தனியார் துறையில் இட ஒதுக்கீடும் அளிப்பதற்கும் தமிழ்நாடு அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.