மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தது குறித்து பொள்ளாச்சி ஜெயராமன் விளக்கம்!

பாஜகவுடன் கூட்டணி கிடையாது என அதிமுக அறிவித்த நிலையில், கோவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை கோவை மாவட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் மூன்று பேர் சந்தித்து பேசினர். இந்த நிலையில், நிர்மலா சீதாராமனை சந்தித்தது ஏன் என்று பொள்ளாச்சி ஜெயராமன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பேரறிஞர் அண்ணா குறித்து பேசியது அதிமுக பாஜக இடையே மீண்டும் மோதலுக்கு அடித்தளமிட்டது. இதனையடுத்து நடந்த அடுத்தடுத்த திருப்பங்களில், பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொள்வதாக அதிமுக அறிவித்தது. மேலும் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகும் முடிவு தொண்டர்கள் எடுத்தது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று தெரிவித்தார். மேலும் பாஜக கூட்டணியில் இனி சேரப்போவது இல்லை என்று அதிமுக திட்டவட்டமாக தெரிவித்தாலும் பாஜக மேலிடம் இது பற்றி இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை. அதிமுக உடன் கூட்டணியில் இருப்பதையே பாஜக தலைவர்கள் பலரும் விரும்புவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதற்கிடையே, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி சென்றுள்ளார். டெல்லியில் ஜேபி நட்டா, அமித்ஷா ஆகியோரை அண்ணாமலை சந்தித்து பேசியதாக தகவல் வெளியானது. அதேபோல், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் அண்ணாமலை சந்தித்து பேசியிருந்தார். அண்ணாமலையின் டெல்லி பயணத்தில் அதிமுக உடனான கூட்டணி முறிவு முக்கிய அஜெண்டாவாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அதிமுக – பாஜக கூட்டணி முறிவையடுத்து, தமிழக அரசியலில் அடுத்தடுத்த நகர்வுகள் பரபரப்பாக சென்று கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில், கோவையில் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்திருந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக எம்.எல்.ஏக்கள் திடீரென சந்தித்து பேசியுள்ளனர். அதிமுக எம்.எல்.ஏக்கள் அமுல் கந்தசாமி, வரதாரஜ் ஜெயராமன், ஏகே செல்வராஜ், ஆகியோர் நிர்மலா சீதாரமனை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது வானதி சீனிவாசனும் உடன் இருந்தார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கோவை வந்த நிர்மலா சீதாராமன், கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் யாரும் பங்கேற்கவில்லை. நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பாக அதிமுக எம்.எல்.ஏக்கள் மூன்று பேரும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியுள்ளனர். அதிமுக பாஜக கூட்டணி முறிந்துள்ள நிலையில், பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான நிர்மலா சீதாரமனை அதிமுக எம்.எல்.ஏக்கள் சந்தித்தது பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்தது.

இந்த நிலையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தது ஏன் என்பது குறித்து அதிமுக எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பொள்ளாச்சி ஜெயராமன் கூறியதாவது:-

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து தென்னை விவசாயிகளின் சார்பாக, அவர்களையும் அழைத்துக்கொண்டு கோரிக்கை மனுவை கொடுத்தோம். மனுவை கொடுத்து மீண்டும் வலியுறுத்துவதற்காக நானும் ஏகே செல்வராஜ் அவர்களும் அமுல் கந்தசாமி அவர்களும், தென்னிந்திய தென்னை விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சக்திவேல் அவர்களும் வந்தோம். இந்த மனுவை கொடுத்தோம். அவ்வளவு தான். வேறு எந்த அரசியலும் பேசவில்லை. தென்னை நார் தொழிற்சாலைகள் நசுங்கி போய் கிடக்கிறது, விளைந்த பொருளுக்கு விலை கிடைக்காமல் தென்னை விவசாயிகள் கவலையில் இருக்கிறார்கள். மாநில அரசிடம் பலமுறை கோரிக்கை வைத்துவிட்டோம்.. ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அரசியல் எதுவும் பேசவில்லை. கூட்டணி பற்றி எதுவும் பேசவில்லை. தென்னை விவசாயிகளின் கோரிக்கை பற்றி தான் நாங்கள் பேசினோம். இவ்வாறு அவர் கூறினார்.