இரட்டை இலை இல்லாமல் போய் விடும்: டிடிவி தினகரன்

வரும் காலத்தில் அதிமுகவில் நிறைய மாற்றம் வரும். இரட்டை இலை இருந்தும் இரட்டை இலையை பலவீனமாக்கி கொண்டு இருக்கிறார். வரும் காலத்தில் அந்த கட்சி சின்னாபின்னமாக அனைத்து வாய்ப்புகளும் உள்ளது என்று டிடிவி தினகரன் கூறினார்.

மதுரையில் உள்ள தனியார் விடுதியில் அ.ம.மு.க. பொது செயலாளா் டி.டி.வி.தினகரன், காந்தி மற்றும் காமராஜர் உருவப் படங்களுக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக உதவியால்தான் பழனிசாமியின் ஆட்சியே காப்பற்றப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரியும். இப்போதும் மத்தியில் அதிகாரத்தில் இருக்கும் பாஜகவை காட்டித்தான் இங்கே இருக்கும் தொண்டர்களையும் நிர்வாகிகளையும் தன்வசப்படுத்தி வைத்து இருக்கிறார். பொதுச்செயலாளராக தன்னிசையாக அறிவித்தது கூட. .நீதிமன்றங்களில் சட்டத்தை தான் பார்ப்பார்கள். பொதுக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையைத்தான் பார்ப்பார்கள். அதனால் நீதிமன்றங்கள் சொல்லியிருந்தாலும் எடப்பாடி பழனிசாமியை பாஜக கைவிட்டு விட்டது என்றால் இரட்டை இலை இல்லாமல் போய்விடும். இரட்டை இலை இல்லாமல் போகும் நேரத்தில் அதிமுக நெல்லிக்காய் மூட்டை போல சிதறிவிடும்.

நாங்கள் ஜனநாயக முறைப்படி போராடி வெற்றி பெறுவோம். லோக்சபா தேர்தலிலோ, சட்டமன்ற தேர்தலிலோ வெற்றி பெற்றிருந்தால் மாற்றங்கள் வந்து இருக்கும். வெற்றி பெற முடியவில்லை. இதை நான் பின்னடைவாக பார்க்கவில்லை. அனுபவமாக பார்க்கிறேன். வரும் காலத்தில் வெற்றி பெறுவதற்கு ஊக்கத்துடன் பெரு முயற்சி எடுப்போம். அதிமுகவை பாஜக கைவிட்டு விட்டால் அதிமுக சின்னாபின்னமாகிவிடும். அதுதான் உண்மை. எடப்பாடி பழனிசாமியே தனது தலையில் கொள்ளிக்கட்டையை எடுத்து சொறிய ஆரம்பித்து விட்டார். அவருக்கு எப்போதுமே நம்பிக்கை துரோகம் செய்துதான் பழக்கம். அவரை முதல்வராக்கியவரையே நாயே.. பேயே என்ற அளவுக்கு பேசினார். அவர் ஆட்சியை காப்பாற்றி கட்சியை காப்பாற்றி கொடுத்த பாஜகவுக்கு இன்றைக்கு நன்றிக்கடன் செலுத்துகிறார். அதற்கான தண்டனையை அனுபவித்துதானே ஆக வேண்டும். வரும் காலத்தில் அதிமுகவில் நிறைய மாற்றம் வரும். இரட்டை இலை இருந்தும் இரட்டை இலையை பலவீனமாக்கி கொண்டு இருக்கிறார். வரும் காலத்தில் அந்த கட்சி சின்னாபின்னமாக அனைத்து வாய்ப்புகளும் உள்ளது.

சினிமா துறை பற்றியும் அதன் பிரச்சினைகள் குறித்தும் எனக்கு முழுமையாக தெரியவில்லை. ஜனநாயக நாட்டில் நடிகர் விஜய் மட்டுமின்றி யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். கூட்டணி குறித்து தற்போது வரை எந்த முடிவும் எட்டப்படவில்லை. இது குறித்து டிசம்பர் மாதம் தெரிவிக்கப்படும். பா.ஜனதாவில் இருப்பவர்கள், என்னோடு பேசிவருகின்றனர். அங்குள்ள நண்பர்கள் யார் என்பதை குறித்து தெரிவிக்க விரும்பவில்லை.

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை, போதை கலாசாரம், மாணவர்கள் போதைக்கு அடிமையாகும் சீர்கேடு உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ளது. தி.மு.க.வினர் தேர்தல் சமயத்தில் அறிவித்த வாக்குறுதிகளை செயல்படுத்தாமல் உள்ளது. ஹிட்லர் ஆட்சி போல தான் ஸ்டாலின் ஆட்சி உள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு மக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள். தி.மு.க. கடந்த 2014 தேர்தலில் ஒரு தொகுதி கூட ஜெயிக்கவில்லை என நினைக்கிறேன். அப்போது அவர் பொறுப்பேற்று நீங்கி இருப்பாரா? அவர்களால் ஒரு ஒன்றிய செயலாளர் மீது கூட நடவடிக்கை எடுக்க முடியாது. கர்நாடகாவில் வன்முறை தூண்டப்படுகிறது. இதே போல்தான் முல்லைபெரியாறு அணையிலும் பிரச்சினை எழுந்தது. அதனால் தேசிய கட்சிகளால் மாநிலங்களுக்கு பயனில்லை என்பது உறுதியாகிறது. மாநில கட்சிகள் வலுவாக இருந்தால் தான் அந்தந்த மாநில பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும். இவ்வாறு அவர் கூறினார்.