டெல்லியில் தர்ணாவில் ஈடுபட்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மஹூவா மொய்த்ரா எம்பி உள்பட பல தலைவர்களை போலீசார் தரதரவென இழுத்து சென்று கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக மம்தா பானர்ஜி உள்ளார். மேற்கு வங்க மாநிலத்தை பொறுத்தமட்டில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் மோதல் போக்கு உள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் முதல்வர் மம்தா பானர்ஜி முதல் அனைத்து தலைவர்களும் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அதேபோல் பாஜக தலைவர்களும் மம்தா உள்பட திரிணாமுல் கட்சியினரை கடுமையாக சாடி வருகின்றனர்.
இந்நிலையில் தான் மேற்கு வங்க மாநிலத் மாநிலத்தில் 100 நாள் வேலை திட்டத்துக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.15 ஆயிரம் கோடியை மத்திய அரசு நிலுவையில் வைத்துள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது. மேலும் இந்த நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் எனக்கூறி டெல்லி ராஜ்காட்டில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் காந்தி ஜெயந்தி தினமான நேற்று முன்தினம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தர்ணாவில் ஈடுபட்டனர். மம்தா பானர்ஜியின் மருமகன் அபிசேக் பானர்ஜி தலைமையில் இந்த தர்ணா போராட்டம் நடந்தது. இதில் அந்த கட்சியின் எம்பி, எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் என ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
இதையடுத்து நேற்று 2வது நாளாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் இருந்து கிராம மேம்பாட்டு அமைச்சகம் அமைந்துள்ள கிருஷி பவனுக்கு ஊர்வலமாக செல்ல முயன்றனர். மேலம் மத்திய அமைச்சர் சத்வி நிரஞ்சன் ஜோதியை அவர்கள் சந்திக்க அனுமதி கேட்டனர். ஒன்றரை மணிநேரம் அவர்கள் காத்திருந்த நிலையில் அனுமதி கிடைக்கவில்லை. இதையடுத்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் அங்கு தர்ணாவில் ஈடுபட்டனர். இரவு 9 மணி ஆனபோதும் அவர்கள் தர்ணாவை முடிக்கவில்லை. இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அங்கு வந்து திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை கலைந்து செல்லும்படி கூறினார்கள். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. இதையடுத்து போலீசார் அவர்களை குண்டுக்கட்டாக தூக்கியும் தரதரவென இழுத்து சென்று கைது செய்தனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பியான மஹூவா மொய்த்ராவை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி சென்றனர். இந்த வீடியோவை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு, ‛‛மத்திய அமைச்சரை சந்திக்க 3 மணிநேரம் காத்திருந்தும் அவர் அனுமதிக்காத நிலையில் உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் தேர்வு செய்யப்பட்ட எம்பி எப்படி நடத்தப்படுகிறார் என்பதற்கு இதுதான் சாட்சி.. ஷேம் பிரதமர் மோடி,ஷேம் அமித்ஷா” என அவர் கூறியுள்ளார்.