தமிழ்நாட்டில் உள்ள இந்து கோயில்களை திமுக அரசு ஆக்கிரமித்து வைத்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
தெலங்கானா சட்டமன்றத்திற்கு வரும் நவம்பர் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. தெலங்கானாவை பொறுத்தவரை ஆளும் பாரதிய ராஷ்டிர சமிதி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடையே மும்முனைப் போட்டி நிலவி வருகிறது. இதுவரை தெலங்கானாவில் கால் பதிக்காத பாஜக, கடந்த மக்களவைத் தேர்தலில் கணிசமான இடங்களை பிடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதனால் இந்த முறை எப்படியாவது தெலங்கானாவில் ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் நேற்று நடைபெற்ற பாஜக தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அவரது உரையின் ஒருபகுதியாக, தமிழகத்தை ஆளும் திமுக அரசையும் மோடி கடுமையாக விமர்சித்தார். அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் சனாதன தர்மத்தை ஒழித்தே ஆக வேண்டும் என்று அந்த மாநில அரசு சூளுரைத்திருக்கிறது. இந்து மக்களின் உயிர் மூச்சான சனாதன தர்மம் அழிக்கப்பட வேண்டியது என்று தமிழக முதல்வரின் மகனே பகிரங்கமாக கூறுகிறார். அதன் ஒருபகுதியாகவே, தமிழகத்தில் உள்ள இந்து கோயில்களை அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்து கோயில்களை தமிழக அரசு ஆக்கிரமித்திருக்கிறது. இது மிகப்பெரிய அராஜகம். ஆனால் சிறுபான்மையினர்களின் வழிபாட்டுத் தலங்களை தமிழக அரசு உட்பட எந்த தென்னிந்திய மாநிலங்களும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவில்லையே ஏன்?
இந்து கோயில் கட்டுப்பாட்டில் இருந்து அரசு விலக வேண்டும் என்று பல மாநிலங்களில் காங்கிரஸ் குரல் கொடுத்து வருகிறதே? காங்கிரஸுக்கு துணிச்சல் இருந்தால் தமிழகத்தில் அப்படி அவர்களால் கூற முடியுமா? நீங்கள்தானே (காங்கிரஸ்) திமுக அரசுடன் கூட்டணியில் இருக்கிறீர்கள். இந்து கோயில் நிர்வாகத்தில் இருந்து அரசு விலக வேண்டும் என்று திமுகவிடம் நீங்கள் கூற வேண்டியதுதானே. இவ்வாறு மோடி கூறினார்.