தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம்; ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு: விஜயகாந்த்

கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் தனியார் பேருந்துகளின் உரிமையாளர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தமிழகத்தில் விடுமுறை நாட்களில் தனியார் பேருந்துகளில் டிக்கெட் கட்டணங்கள் தாறுமாறாக உயர்த்தப்படுகின்றன. கடந்த வாரம் மிலாது நபி, வார இறுதி நாட்கள் மற்றும் காந்தி ஜெயந்தி என தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்கும், சுற்றுலா தலங்களுக்கும் சென்ற பொதுமக்கள் மீண்டும் சென்னைக்குத் திரும்பியபோது தனியார் பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் பல மடங்கு வசூலிக்கப்பட்டதால் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.

விடுமுறை நாட்களில் தமிழக அரசு சார்பில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததாலும், அரசுப் பேருந்துகள் தரம் இல்லாததாலும் பொதுமக்கள் தனியார் பேருந்துகளில் பயணிக்கின்றனர். இதைப் பயன்படுத்தி தனியார் பேருந்துகள் தொடர்ந்து கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றன. இதை தமிழக அரசும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

எனவே, பண்டிகை நாட்களில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவதை தடுக்க, தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழுவை அமைத்து, தனியார் பேருந்துகளின் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். அதேநேரம், கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் தனியார் பேருந்துகளின் உரிமையாளர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.