நாளை கேஆர்எஸ் அணையை முற்றுகையிட கன்னட அமைப்பினர் முடிவு!

தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் தர எதிர்ப்பு தெரிவித்து நாளை (அக்டோபர் 5) பெங்களூரில் இருந்து ஏராளமான வாகனத்தில் ஊர்வலமாக சென்று மண்டியா மாவட்டத்தில் உள்ள கேஆர்எஸ் அணையை வாட்டாள் நாகராஜ் தலைமையில் முற்றுகையிட கன்னட அமைப்பினர் முடிவு செய்துள்ளனர்.

தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறப்பதை கண்டித்து மண்டியா, பெங்களூரில் அடுத்தடுத்து பந்த் நடத்தப்பட்டது. அதன்பிறகு கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவரும், ஒருங்கிணைந்த கன்னட அமைப்பின் தலைவருமான வாட்டாள் நாகராஜ் தலைமையில் கடந்த மாதம் 29 ம் தேதி கர்நாடகா முழுவதும் பந்த் நடத்தப்பட்டது. இதனால் தமிழகம்-கர்நாடகா இடையேயான பஸ் போக்கவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. பெங்களூர், மைசூர், மண்டியா உள்ளிட்ட தென்கர்நாடகாவின் பல மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இத்தகைய சூழலில் தான் அக்டோபர் 5-ந் தேதி கேஆர்எஸ் (கிருஷ்ணராஜ சாகர் அணை) சலோ போராட்டம் நடத்தப்படும் என வாட்டாள் நாகராஜ் அறிவித்தார். அதாவது தமிழ்நாட்டுக்கு காவிரியில் கேஆர்எஸ் அணையில் இருந்து தான் தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த அணை மண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தகைய சூழலில் தான் பெங்களூரில் இருந்து மண்டியா சென்று கேஆர்எஸ் அணையை முற்றுகையிட்டு தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கூடாது என அவர் வலியுறுத்த உள்ளார்.

இந்நிலையில் தான் நாளை நடக்கும் கேஆர்எஸ் அணை முற்றுகை போராட்டம் குறித்து வாட்டாள் நாகராஜ் கூறியதாவது:-

நிரந்தரமாக காவிரிக்காக போராட்டம் நடத்தப்பட உள்ளது. கன்னட அமைப்புகள் அனைத்தும் ஒருங்கிணைந்து காவிரிக்காக இந்த போராட்டத்தை முன்னெடுக்கிறது. அக்டோபர் 5ம் தேதி (நாளை) பெங்களூரில் இருந்து கேஆர்எஸ் அணையில் இருந்து ஊர்வலம் நடத்தப்பட உள்ளது. இந்த ஊர்வலத்தில் ஏராளமான வாகனங்கள் பங்கேற்க உள்ளன. இந்த போராட்டம் அமைதியாக நடத்தப்பட இருக்கிறது. இந்த ஊர்வலம் என்பது பெங்களூர் மைசூர் வங்கி சர்க்கிளில் இருந்து காலை 10 மணிக்கு வாகன ஊர்வலம் புறப்பட்டு கேஆர்எஸ் அணைக்கு செல்லும். இந்த போராட்டத்தில் பங்கேற்க அனைவரும் வாகனங்களில் வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த முற்றுகை போராட்டத்தையொட்டி கேஆர்எஸ் அணையை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு கர்நாடகா அரசு முடிவு செய்துள்ளது.