சீன நிறுவனங்களிடம் இருந்து பெருமளவில் நிதி பெற்ற பிரதமரின் கேர்ஸ் நிர்வகிப்பவர் மீது ஏன் ஒரு நடவடிக்கையும் இல்லை என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்தியில் மோடி தலைமையிலான பாஜக அரசு ஊடகங்களின் மீதான அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு குஜராத் கலவரம் குறித்து ஆவணப்படம் வெளியிட்ட பிபிசி அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. தற்போது மத்திய அரசின் மக்கள் விரோத திட்டங்களை வெளிச்சம்போட்டுக் காட்டி வந்த டெல்லியில் உள்ள ‘நியூஸ்கிளிக்’ இணைய செய்தி நிறுவனத்துக்கு டெல்லி போலீசார் நேற்று செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனா்.
முன்னதாக, அந்த நிறுவனத்தில் பணிபுரியும் செய்தியாளா்கள் மற்றும் ஊழியா்களுக்குச் சொந்தமான 30 இடங்களில் நேற்று அதிகாலை முதல் அதிரடி சோதனை மேற்கொண்டதோடு, டெல்லியில் உள்ள அந்தச் செய்தி நிறுவனத்தின் அலுவலகத்துக்கும் சீல் வைத்தனா். பின்னர், அதன் நிறுவனரும் தலைமை ஆசிரியருமான பிரபீா் புா்காயஸ், அமித் சக்கரவர்த்தி ஆகியோரை தெற்கு டெல்லியில் அமைந்துள்ள நியூஸ்கிளிக் அலுவலகத்துக்கு போலீஸாா் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனா். தடயவியல் நிபுணா்களும் அங்கு சென்று ஆதாரங்களை சேகரிக்கும் பணியை மேற்கொண்டனா். நிறுவனத்தின் செய்தியாளா் அபிஷா் சா்மா விசாரணைக்குப் பிறகு போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளாா்.
ஊடகத்தின் குரல்வளையை நசுக்கும் மத்திய பாஜக அரசின் இந்த செயலுக்கு இந்தியா கூட்டணி கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் சக பத்திரிக்கையாளர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ‘நிலைமையை உன்னிப்பாக கனித்து வருகிறோம். விரிவான அறிக்கை வெளியிடப்படும். பத்திரிகையாளா்களுக்கு சங்கம் உறுதியாக துணைநிற்கும். விரிவான அறிக்கை வெளியிட மத்திய அரசை வலியுறுத்தும் என்று இந்திய பத்திரிகையாளா் சங்கம் தெரிவித்திருந்தது.
இந்தநிலையில், உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன், சீன நிறுவனங்களிடம் இருந்து பெருமளவில் நிதி பெற்ற பிரதமர் கேர்ஸ் நிர்வகிப்பவர் மீது ஏன் ஒரு நடவடிக்கையும் இல்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில், ‘சீனாக்காரர் ஒருவரிடமிருந்து கொஞ்சம் நிதி வந்த ஒரே காரணத்துக்காக, நியூஸ்கிளிக் மீது தேசதுரோக வழக்கு. அந்த நிறுவனத்தோடு தொடர்பு கொண்டவர்களின் வீடுகளில் சோதனை, அவர்களின் கைப்பேசிகள், மடிக்கணினிகளும் கைப்பற்றப்பட்டு சோதனைக்கு உள்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் சீன நிறுவனங்களிடமிருந்து பெருமளவில் நிதி பெற்ற பிரதமர் கேர்ஸ் நிர்வகிப்பவர் மீது ஏன் ஒரு நடவடிக்கையும் இல்லை? சீன நிறுவனங்களிடம் இருந்து பெருமளவில் நிதி பெற்றது எது?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.