குடிக்க வைத்த திமுக.,வுக்கு ஆசிரியர்களின் மதிப்பு எப்படி தெரியும்?: சீமான்

டாஸ்மாக் வைத்து குடிக்க வைத்த திமுக.,வுக்கு ஆசிரியர்களின் மதிப்பு எப்படி தெரியும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வந்த பகுதிநேர ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களை இன்று (அக்.,05) காலை போலீசார் கைது செய்தனர். அவர்களை சமூகநல கூடத்தில் போலீசார் அடைத்து வைத்தனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கைது செய்யப்பட்ட ஆசிரியர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது:-

இது எவ்வளவு கேவலம். ஏதோ நாங்கள் தான் படிக்க வைத்தோம், கல்வி கொடுத்தோம் என பேசி வருகின்றனர். அதுவும், நாங்கள் கல்வி கொடுக்கவில்லை என்றால் சீமான் படித்திருப்பாரா என கேட்கின்றனர். படிக்க வைத்தது முன்னாள் முதல்வர் காமராஜர். நீங்கள் (திமுக.,வினர்) டாஸ்மாக் வைத்து குடிக்க வைத்தீர்கள். உங்களுக்கு ஆசிரியர்களின் மதிப்பு எப்படி தெரியும்? பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் ஒரு ஆசிரியரிடம் படித்திருப்பார்; அவருக்கு ஆசிரியரின் மதிப்பு, பெருமை தெரியாதா?

அவர்கள் கேட்கும் ஊதியத்தில் பாதி அளவாவது கொடுங்கள். எல்லாத்துக்கும் நிதி இல்லை என்கின்றனர். சமாதி கட்ட, பேனா சின்னம் கட்ட, பன்நோக்கு மருத்துவமனை கட்ட, நூலகம் கட்ட நிதி எப்படி வருகிறது? நிதி இல்லையெனில் தேர்தலில் ஓட்டுக்கு காசு கொடுப்பீர்களா மாட்டீர்களா? எத்தனை ஆயிரம் கோடி கொட்டுவீர்கள்!

ஆசிரியர்களை போல, தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடை ஊழியர்கள் இப்படி போராட்டம் நடத்தினால் இந்த அரசு கண்டுக்கொள்ளாமல் இருக்குமா? உங்கள் கோரிக்கை என்ன என அரை மணி நேரத்தில் போய் பேசுவார்கள். குடிக்க வைக்கிற மதுபான கடை ஊழியருக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, கல்வி கற்று தரும் ஆசிரியர்களுக்கு கொடுக்க மறுப்பது ஏன்?. இவ்வாறு அவர் கூறினார்.