அருட்பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளாரின் 200வது பிறந்தநாள் கொண்டாட்ட நிறைவு விழா தமிழக ஆளுநர் மாளிகையில் இன்று காலை நடைபெற்றது. இந்த விழாவில் காணொலி வாயிலாக பங்கேற்று உரையாற்றிய பிரதமர் மோடி, “பெண்களுக்கான 33% இடஒதுக்கீட்டை வள்ளலார் இருந்திருந்தால் பாராட்டியிருப்பார்” என்று கூறியுள்ளார்.
அருட்பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார், கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலிருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் 05.10.1823இல் பிறந்தார். கருணை ஒன்றையே வாழ்க்கை நெறியாகக் கொண்டு வாழ்ந்தார். அனைத்து நம்பிக்கைகளிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதைக் குறிக்கும் வண்ணம் இவர் சமரச சுத்த சன்மார்க்கத்தை நிறுவினார். இவர் வடலூரில் சத்தியஞான சபையை எழுப்பினார். ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று பாடிய இவர், மக்களின் பசித்துயர் போக்க சத்தியதர்ம சாலையை நிறுவினார். அவர் ஏற்றிய அடுப்பு இன்றுவரை அணையாமல் தொடர்ந்து எரிந்த வண்ணம் பசியோடு இருக்கும் மக்களின் வயிற்றை நிரப்புகிறது.
மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம் ஆகிய உரைநடைகளை எழுதினார். இவர் பாடிய பாடல்களின் திரட்டு திருவருட்பா என்று அழைக்கப்படுகிறது. இது 6 திருமுறைகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. திருவருட்பா ஆறாம் திருமுறையில், எந்தச் சமயத்தின் நிலைப்பாட்டையும் எல்லா மதநெறிகளையும் சம்மதம் ஆக்கிக் கொள்கிறேன் என்றார். சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் நிறுவிய அவர், சத்திய தருமச்சாலையையும், சித்தி வளாகத்தையும் உருவாக்கினார். இத்தனை பெருமைகளை கொண்ட வள்ளலாரின் பிறந்த நாளான அக்டோபர் மாதம் 5ம் தேதி ஆண்டுதோறும் ‘தனிப்பெருங்கருணை நாள்’ எனக் கடைப்பிடிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது.
இந்நிலையில் அவரது பிறந்த நாளான இன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் வள்ளலார் திருவுருவச்சிலை திறக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக பங்கேற்று உரையாற்றிய பிரதமர் மோடி, “இளைஞர்கள் தமிழிலும், சமஸ்கிருதத்திலும், ஆங்கிலத்திலும் புலமை பெற வேண்டும் என்று வள்ளலார் விரும்பினார். அவர் காலத்திற்கு முன்னதாகவே சிந்தித்தவர். கடவுளைப் பற்றிய வள்ளலாரின் பார்வை பல்வேறு மதங்களுக்கு அப்பாற்பட்டவை. இந்த உலகத்தில் ஒவ்வொரு அணுவிலும் அவர் கடவுளின் அம்சத்தை கண்டார். வள்ளலாரின் போதனைகள் அனைவருடனும் அனைவரும் வளர்ச்சிக்காகவும் அனைவரின் நம்பிக்கைக்காகவும் சமத்துவ சமுதாயத்தை வலியுறுத்துவதாக இருந்தது. மகளிருக்கு வழங்கப்பட்ட 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை அவர் உயிரோடு இருந்தால் பாராட்டி இருப்பார் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.