குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஹெக்டேர்‌ ஒன்றுக்கு ரூ.13,500 இழப்பீடு!

டெல்டா மாவட்டங்களில்‌ குறுவை பயிர்‌ சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஹெக்டேர்‌ ஒன்றுக்கு ரூ.13,500 இழப்பீடாக வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதை நம்பி காவிரி டெல்டா மாவட்டங்களில் தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் குருவை சாகுபடி செய்யப்பட்டது. திருவாரூர், நாகை மாவட்டங்களில் தண்ணீரின்றி குறுவை சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் கருகின. இதனால் விவசாயிகள் கண்ணீர் விட்டனர். நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையை அடுத்த சித்தாய்மூர், கீரம்பேர், முத்தரசபுரம், நத்தப்பள்ளம், தொழுதூர் ஆய்மூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 5000 ஏக்கருக்கும் அதிகமான குறுவை சாகுபடி பயிர்கள் 80 நாள் ஆகியும் கதிர் வராமலும் நெற்பயிர்கள் கருகியும் சூள்கட்டிய பயிர்கள் பதராகவும் மாறி உள்ளது. குறுவை சாகுபடிக்கு வாங்கிய கடனையே எவ்வாறு அடைப்பது என தெரியாத நிலையில் சம்பா சாகுபடியை எவ்வாறு துவங்குவது என தெரியவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் நாளைய தினம் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் செல்ல உள்ள நிலையில் இன்றைய தினம் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில்‌ டெல்டா மாவட்ட விவசாயிகள்‌ பயன்பெறும்‌ வகையில்‌, குறுவை சாகுபடி செய்வதற்கு ஏதுவாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்களால்‌ 12-6-2023 அன்று மேட்டூர்‌ அணையிலிருந்து தண்ணீர்‌ திறந்து வைக்கப்பட்டது. ஆனால்‌, காவிரி ஆற்றில்‌ கர்நாடக மாநிலத்திலிருந்து போதிய அளவு தண்ணீர்‌ தொடர்ந்து பெறப்படாத காரணத்தால்‌, மேட்டூர்‌ அணையிலிருந்து விவசாயத்திற்கு போதிய அளவு தண்ணீர்‌ திறந்து விட இயலாத நிலையில்‌, தற்போது டெல்டா மாவட்டங்களில்‌ ஏறத்தாழ 40 ஆயிரம்‌ ஏக்கர்‌ பரப்பில்‌ பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள்‌ வாடிய நிலையில்‌ பாதிக்கப்பட்டுள்ளது. பயிர்‌ பாதிப்பு விவரங்கள்‌ முறையாக கணக்கிடப்பட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேர்‌ ஒன்றுக்கு ரூ.13,500/- இழப்பீடாக வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்‌ இன்று (5-10-2023) உத்தரவிட்டுள்ளார்கள்‌” என தெரிவிக்கப்பட்டுள்ளது.