ஆம்ஆத்மி எம்பி சஞ்சய் சிங்குக்கு அக்.,10 வரை அமலாக்கத்துறை காவல்!

டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மணிஷ் சிசோடியாவை தொடர்ந்து நேற்று முன்தினம் ஆம்ஆத்மி எம்பி சஞ்சய் சிங்கை அமலாக்கத்துறை கைது செய்தது. இந்நிலையில் தான் அவரை 10ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். ஊழலுக்கு எதிராக போராடுவதாக கட்சி துவங்கி டெல்லியில் ஆட்சியை பிடித்த அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது இக்கட்டான பிரச்சனையை சந்தித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் அவரது அரசு வகுத்த டெல்லி புதிய மதுபான கொள்கை தான். கடந்த 2021 நவம்பரில் டெல்லியில் புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது. இதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், சட்டவிரோதமாக ஆம்ஆத்மி கட்சியின் தலைவர்களுக்கு பணம் மாற்றப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து ஆளுநர் விகே சக்சேனா சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி டெல்லி துணை முதல்வரும், கலால்துறை அமைச்சருமான மணிஷ் சிசோடியா உள்பட பலரது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. மேலும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்தது, அது தேர்தல் செலவுக்கு பயன்படுத்தப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அமலாக்கத்துறையும் விசாரணையை தொடங்கியது.

இதற்கிடையே தான் கடந்த டெல்லி துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியாவை சிபிஐ, அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. மேலும் தொடர்ந்து சிபிஐ, அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில் உணவக உரிமையாளரான தினேஷ் அரோரா என்பவருக்கும் தொடர்பு இருப்பதும், அவர் ஆம்ஆத்மி எம்பி சஞ்சய் சிங்கின் நண்பர் என்பதும் தெரியவந்தது. மேலும் தேர்தலுக்காக தினேஷ் அரோராவிடம் இருந்து சஞ்சய் சிங் மூலம் பணம் கைமாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனை மணிஷ் சிசோடியா தொடர்பான குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து தான் டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம்ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்பியான சஞ்சய் சிங் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். இந்த சோதனையை தொடர்ந்து அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் தான் நேற்று டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சஞ்சய் சிங் எம்பியை அமலாக்கத்துறையினர் ஆஜர்ப்படுத்தினர். மேலும் சஞ்சய் சிங்கிடம் டெல்லி மதுபான கொள்கை முறைகேடு குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டி உள்ளது. இதனால் அவரை காவலில் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை பரிசீலனை செய்த சிறப்பு நீதிமன்றம் வரும் 10ம் தேதி வரை அதாவது 5 நாட்கள் சஞ்சய் சிங்கை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் அக்டோபர் மாதம் 10ம் தேதி வரை சஞ்சய் சிங்கிடம் அமலாக்கத்துறையினர் அதிரடியாக விசாரணை நடத்த உள்ளனர். இந்த விசாரணையின்போது மேலும் புதிய தகவல்களை திரட்ட அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. அதோடு டெல்லி புதிய மதுபான கொள்கை வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள மணிஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 2 பேரும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மிகவும் நெருக்கமானவர்கள். இதனால் ஆம்ஆத்மி கட்சி அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.