10-ந் தேதி தமிழக எல்லையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்: வாட்டாள் நாகராஜ்

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கே.ஆர்.எஸ். அணையை முற்றுகையிட முயன்ற வாட்டாள் நாகராஜ் உள்பட கன்னட அமைப்பினர் கைது செய்யப்பட்டனர். வருகிற 10-ந் தேதி தமிழக எல்லையை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கண்டித்தும், கன்னட அமைப்பினர், விவசாயிகள், பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்) கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் கன்னட கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் நேற்று பெங்களூருவில் மைசூரு வங்கி சர்க்கிளில் போராட்டம் நடந்தது. இதில் ஏராளமான கன்னட அமைப்பினர் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர். அப்போது மண்டியா கே.ஆர்.எஸ்.(கிருஷ்ணராஜசாகர்) அணையை முற்றுகையிடுவதாக வாட்டாள் நாகராஜ் அறிவித்திருந்தார். அதன்படி நேற்று மாலை மண்டியாவிற்கு வந்த வட்டார் நாகராஜ் தலைமையிலான கன்னட அமைப்பினர் விசுவேஸ்வரய்யா பூங்காவில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்த விவசாயிகளை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். அப்போது அவர்கள், மத்திய, மாநில அரசை கண்டித்து கோஷமிட்டனர்.

இதையடுத்து வாட்டாள் நாகராஜ் தலைமையிலான கன்னட அமைப்பினர் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகாவில் உள்ள கே.ஆர்.எஸ். அணையின் முன்பு சென்று போராட்டம் நடத்தினர். அப்போது தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவப்படத்தை கிழித்து எறிந்து, தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். பின்னர் கே.ஆர்.எஸ். அணையை முற்றுகையிட முயற்சித்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வாட்டாள் நாகராஜ் உள்பட கன்னட அமைப்பினரை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் வாட்டாள் நாகராஜ் உள்பட 50-க்கும் அதிகமான கன்னட அமைப்பினரை குண்டு கட்டாக தூக்கி சென்று வேனில் அடைத்து அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்ட வாட்டாள் நாகராஜ் கூறியதாவது:-

கே.ஆர்.எஸ். அணையை பார்வையிட மகாராஜா குடும்பத்தினருக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் விவசாயிகள், கன்னட அமைப்பினர்களுக்கு அனுமதி வழங்க அரசு மறுப்பு தெரிவிக்கிறது. இந்த கே.ஆர்.எஸ். அணை விவசாயிகளின் உயிர் நாடி. இங்கிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவது, விவசாயிகளின் ரத்தத்தை விடுவதற்கு சமம்.

மத்திய, மாநில அரசுகள் இந்த காவிரி பிரச்சினையில் தொடர்ந்து மவுனம் காத்து வருவது கண்டிக்கதக்கது. பிரதமர் இது குறித்து காவிரி மேலாண்மை ஆணையத்திடம் பேச்சு வார்த்தை நடத்தவேண்டும். மாநில முதல்-மந்திரி சித்தராமையா இந்த விவரகாரத்தில் அலட்சியமாக செயல்படகூடாது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை மீறி, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடகூடாது. இதனால் ஆட்சி கலைக்கப்பட்டாலும் பரவாயில்லை. மீண்டும் நீங்கள் முதல்-மந்திரி ஆகிவிடலாம். ஆனால விவசாயிகளின் பிரச்சினைக்கு யார் தீர்வு காண்பது.

நாளை இதேபோன்று கே.ஆர்.எஸ் அணையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும். இதற்கு கன்னட அமைப்பினர் ஆதரவு தெரிவிப்பார்கள். அதேபோல வருகிற 10-ந் தேதி தமிழக எல்லையை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும். தமிழ்நாடு-கர்நாடகா எல்லையில் பந்த் நடத்தப்பட உள்ளது. அன்றைய தினம் கர்நாடகா-தமிழ்நாடு எல்லையான அத்திப்பள்ளியில் பந்த் நடத்தப்பட உள்ளது. இந்த போராட்டம் தீவிரமாக நடத்தப்பட உள்ளது. கர்நாடகாவுக்காகவும், கன்னட மொழிக்காவும் நான் இன்னும் ஏராளமான போராட்டங்களை தீவிரமாக மேற்கொள்ள உள்ளேன். இதற்கு மாநில எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.