திமுக வள்ளலார் விழாவை கொண்டாட வேணடிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறது: தமிழிசை

“கடவுள் நம்பிக்கை இல்லை என்று கூறும் திமுக, இன்றைக்கு வள்ளலார் விழாவை கொண்டாட வேணடிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டிருப்பது மகிழ்ச்சி” என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கூறினார்.

தெலங்கானாவுக்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக சில தினங்களுக்கு முன்பு வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி, திமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார். சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று சூளுரைத்திருக்கும் தமிழக அரசு, இந்து கோயில்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது எதற்காக? என்று மோடி கேள்வியெழுப்பினார். மேலும், இந்து கோயில்களை ஆக்கிரமித்து வைத்திருக்கும் திமுக அரசால், சிறுபான்மையினர்களின் வழிபாட்டுத் தலங்களை கட்டுப்படுத்த முடியுமா? எனவும் கேட்டார்.

பிரதமர் மோடியின் இந்தக் கருத்தானது, தமிழகம் மட்டுமல்லாமல் இந்திய அளவிலும் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்நிலையில், தமிழக பாஜகவினரும் பிரதமரின் இந்தக் குற்றச்சாட்டை ஆவேசமாக முன்வைக்க தொடங்கி இருக்கிறார்கள். கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏவான வானதி சீனிவாசன் நேற்று பேசும் போது, மத நம்பிக்கையில்லதவர்கள் கையில் இந்து கோயில்கள் எதற்கு இருக்க வேண்டும் என்றும், இந்து கோயில்களில் இருந்து தமிழக அரசு உடனடியாக வெளியேற வேண்டும் எனவும் காட்டமாக பேசியிருந்தார்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தராஜனிடம் நிருபர்கள் நேற்று கேள்வியெழுப்பினர் அதற்கு பதிலளித்த தமிழிசை செளந்தரராஜன், “சாமி மேல நம்பிக்கை இல்லைனு சொல்றீங்க. அப்படிப்பட்ட உங்களை, வள்ளலார் விழா கொண்டாட வேண்டிய கட்டாயத்திற்கு காலம் தள்ளியிருப்பதை நினைத்தால் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது. இல்லைனா.. என்னைக்கு நீங்க இந்த விழாவை எல்லாம் கொண்டாடி இருக்கீங்க? இன்னும் கொஞ்சம் நாளில், குடமுழுக்கு விழாக்களுக்கு முதல்வர் வந்தாலும் நான் மகிழ்ச்சி அடைவேன். தேர்தல் நெருங்குதுல்ல. இதுக்கெல்லாம் வாய்ப்பு இருக்கு.

தீபாவளிக்கு ஒரு வாழ்த்து சொல்ல மாட்டேங்குறீங்க.. விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்ல மாட்டேங்குறீங்க. அப்படிப்பட்ட நீங்கள் எதற்கு இந்து கோயில் நிர்வாகத்தையும் வைத்திருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கேள்வி” என தமிழிசை செளந்தரராஜன் கூறினார்.