தேமுதிகவை குறைத்து மதிப்பிட வேண்டாம்: பிரேமலதா

தேமுதிகவை குறைத்து மதிப்பிட வேண்டாம் என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா கூறினார்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் தேமுதிக கட்சி தொடக்க ஆண்டு விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, நேற்று இரவு நடந்த பொதுக்கூட்டத்தில் பிரேமலதா பேசியதாவது:-

திமுக அரசு இதுவரை 5 சதவீத வாக்குறுதிகளைதான் நிறைவேற்றியுள்ளது. ஆனால் முதல்வர் அதை மாற்றிக் கூறி வருகிறார். சனாதன தர்மத்தை பற்றி தெரியாதவர்கள் அதை பற்றி பேசுகின்றனர். அனைவரும் சமமாகவும், ஒற்றுமையாகவும் வாழ தகுதியான பூமி இந்தியாதான். ஒரே இனம், ஒரே குலம் என்று ஒற்றுமையாக வாழ்வதைத்தான் சனாதனம் அறிவுறுத்துகிறது. ஆனால், சாதி, மதத்தில் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தி, அதன்மூலம் அரசியல் லாபம் பார்ப்பதுதான் திமுக. இதை மக்கள் சார்பில் கண்டிக்கிறேன். சாதி, மத, இனத்துக்கு அப்பாற்பட்டவர்தான் விஜயகாந்த்.

தமிழகம் முழுவதும் டெங்கு பரவி வருகிறது. மருத்துவமனையில் நோயாளிகள் குவிந்து வருகின்றனர். ஆசிரியர்கள் தொடர்ந்து போராடுகின்றனர். டாஸ்மாக் பிரச்சினை, காவிரி நீர் வராததால் விவசாயிகளுக்கு பிரச்சினை, சட்டம்-ஒழுங்கு பிரச்சினை, சாலை, குடிநீர் வசதி, வேலைவாய்ப்புகள் இல்லை.

விஜயகாந்த் யாருடன் கூட்டணி வைக்கிறாரோ, அந்த கூட்டணிதான் மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறும். தேமுதிகவை குறைத்து மதிப்பிட வேண்டாம். தமிழக மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முன்வரும் கட்சிகள் மற்றும் தேமுதிகவை தேடி வரும் கட்சிகளுடன்தான் கூட்டணி. இவ்வாறு அவர் பேசினார்.