இஸ்ரேல் வாழ் தமிழர்களுக்கு தமிழ்நாடு அரசின் அவசர உதவி எண்கள் அறிவிப்பு!

இஸ்ரேல் – பாலஸ்தீனம் நாடுகளுக்கு இடையே போர் மூண்டிருக்கும் நிலையில் அங்குள்ள தமிழர்கள் தொடர்புகொள்ள தமிழ்நாடு அரசு அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது.

இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்திலிருக்கும் ஹமாஸ் அமைப்பு ராக்கெட்டுகளை வீசி இன்று திடீர் தாக்குதல் நடத்தியது. அந்தத் தாக்குதலில் இஸ்ரேலில் இதுவரை 42 பேர் பலியாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் 500 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பாலஸ்தீனத்தின் தாக்குதலுக்கு இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தியதில் கிட்டத்தட்ட 200 பாலஸ்தீனியர்கள் பலியாகியுள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இருத்தரப்பும் மாறி, மாறி தாக்குதல் நடத்தி வருவதால் இஸ்ரேல் – பாலஸ்தீனம் நாடுகளுக்கு இடையே பெரும் பதற்றம் நிலவுகிறது.

இதனிடையே அந்நாட்டில் வசிக்கும் இந்தியர்கள், பாதுகாப்பாக இருக்குமாறும், தனியாக வெளியே செல்ல வேண்டாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இஸ்ரேல் – பாலஸ்தீனம் நாடுகளுக்கு இடையே போர் மூண்டிருக்கும் நிலையில் அங்குள்ள தமிழர்கள் தொடர்புகொள்ள தமிழ்நாடு அரசு அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது. இதன்படி இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன வாழ் தமிழர்கள் +91-87602 48625; +91-99402 56444; +91-96000 23645 என்ற தொலைபேசி எண்களிலும், nrtchennai@tn.gov.in, nrtchennai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.