காவிரி விவகாரத்தில் மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவதால் குறுவை பயிர்களையும் காக்க முடியாது; உழவர்கள் கண்ணீரையும் துடைக்க முடியாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதனால் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அணைகளை கையாளும் அதிகாரம் கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என முக்கியமான யோசனை அளித்துள்ளார்.
இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளதாவது:-
தமிழ்நாட்டில் குறுவை நெற்பயிர்களைக் காப்பாற்ற காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஆணையை செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற அரசு தீர்மானித்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. காவிரி சிக்கலின் அடிப்படையை அறியாமல் இதுபோன்று பெயரளவில் தீர்மானம் நிறைவேற்றுவதால் குறுவை பயிர்களையும் காக்க முடியாது; உழவர்கள் கண்ணீரையும் துடைக்க முடியாது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அண்மைக்கால ஆணை என்பது, அக்டோபர் 15-ஆம் நாள் வரை காவிரியில் தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 3,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்பது தான். தமிழக சட்டப்பேரவையின் தீர்மானத்தை மதித்து காவிரி ஆணையத் தீர்ப்பை கர்நாடக அரசு நாளை மறுநாள் முதல் செயல்படுத்துவதாக வைத்துக் கொண்டாலும், அதன் பயனாக தமிழகத்திற்கு ஒரு நாளை 0.25 டி.எம்.சி வீதம் 6 நாட்களுக்கு 1.50 டி.எம்.சி மட்டுமே தண்ணீர் கிடைக்கும். அதைக் கொண்டு எதையும் செய்ய முடியாது. காவிரி சிக்கலில் தீர்மானம் நிறைவேற்றியதாக பெருமை பேசவே பயன்படும்.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஆணையை செயல்படுத்த வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றும் முடிவுக்கு தமிழக அரசு எவ்வாறு வந்தது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. காவிரி சிக்கல் தொடர்பாக கடந்த இரு மாதங்களாக வந்த செய்திகளைப் பார்த்தால் காவிரி ஆணையம் தமிழகத்துக்கு எந்த அளவில் துரோகங்களை செய்தது என்பதை புரிந்து கொள்ள முடியும். தமிழ்நாட்டுக்கு காவிரியில் வினாடிக்கு 24,000 கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்திய போது, கர்நாடக அணைகளில் 80 டி.எம்.சி தண்ணீர் இருந்தாலும் கூட, வினாடிக்கு 10,000 கனஅடி திறக்க ஆணையம் ஆணையிட்டது. இதை எதிர்த்து தான் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. பின்னர் தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவை 5000 கன அடியாக குறைக்க ஆணையம் ஆணையிட்டது. ஒரு கட்டத்தில் வினாடிக்கு 12,000 கனஅடி தண்ணீர் திறக்க வேண்டுமென தமிழகம் கோரிய போது 3000 கன அடி மட்டுமே தண்ணீர் திறக்க ஆணையிட்டது. இப்படியாக காவிரி ஆணையம் பிறப்பித்த ஒவ்வொரு ஆணையும் தமிழ்நாட்டின் நலன்களுக்கு எதிரானது தான். காவிரி ஆணையம் அதன் பணிகளை செய்யவில்லை; மெத்தனமாக உள்ளது என்று தமிழக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் கடந்த ஜூலை மாதம் முதல் பலமுறை குற்றஞ்சாட்டியுள்ளார். ஒரு மாநில அமைச்சரால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட காவிரி ஆணையத்தின் ஆணையை செயல்படுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றுவது நகைப்புக்கிடமானதாகவே அமையும். இதை அரசு உணர வேண்டும்.
தமிழ்நாட்டில் இன்று 2 லட்சத்திற்கும் கூடுதலான ஏக்கர் பரப்பளவில் குறுவை பயிர்கள் கருகுவதற்கு காரணமே காவிரி ஆணையமும், அதன் அதிகாரமற்ற தன்மையும் தான். காவிரி ஆணையம் ஆணையிட்டாலும், அதை செயல்படுத்த கர்நாடக அரசு முன்வராது. இந்த சூழலை மாற்றாத வரை காவிரி பாசன மாவட்டங்களில் கண்ணீர் சூழல் மாறாது. அதேநேரத்தில் இந்த சூழல் மாற்ற முடியாதது அல்ல. தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளை கையாளும் அதிகாரத்தை காவிரி ஆணையத்திற்கு வழங்குவது தான் அதற்கான தீர்வு ஆகும். அத்தகைய அதிகாரம் ஆணையத்திற்கு வழங்கப்பட்டால், தமிழகத்திற்கான தண்ணீரை ஆணையமே திறந்து விட முடியும்; அதை கர்நாடகத்தால் தடுக்க முடியாது. இன்னும் கேட்டால் அத்தகைய அதிகாரத்தை காவிரி நடுவர் மன்றம் அதன் இறுதித் தீர்ப்பில் காவிரி ஆணையத்திற்கு வழங்கியிருந்தது. ஆனால், காவிரி ஆணையத்தை அமைக்க மத்தியில் இருந்த அரசுகள் மறுத்து வந்த நிலையில், அதுகுறித்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தான், அத்தகைய அதிகாரமின்றி ஆணையம் அமைக்க 2018-ஆம் ஆண்டில் ஆணையிட்டது. அது தான் அனைத்து சிக்கல்களுக்கும் காரணமாகும். அதிகாரம் இல்லாத காவிரி மேலாண்மை ஆணையத்தால் பயனில்லை என்பது இப்போது தெளிவாகிவிட்ட நிலையில், அதை மாற்றி அணைகளை கையாளும் அதிகாரத்துடன் கூடிய காவிரி ஆணையம் அமைப்பது தான் சரியான தீர்வாகும். அதற்கான முயற்சிகளை தமிழகம் தொடங்க வேண்டும். அதன் தொடக்கமாக, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டவாறு அணைகளை கையாளும் அதிகாரத்துடன் கூடிய காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். அதைத் தொடர்ந்து அதற்கான அரசியல் மற்றும் சட்டப்படியான நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.