ஊழலை ஒழிக்க, சேவை பெறும் உரிமைச் சட்டம் என்ற சிறந்த ஆயுதம் இருக்கும் நிலையில், அதைப் பயன்படுத்த அரசு முன்வராதது வருத்தமளிக்கிறது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலகங்களில் மக்களுக்குத் தேவையான சேவைகளை வழங்குவதற்கு கையூட்டு பெற்ற அதிகாரிகள் கைது செய்யப்பட்டதாக வெளியாகும் செய்திகள் அதிகரித்து வருகின்றன. அரசு அலுவலகங்களிலும், நிர்வாகக் கட்டமைப்பிலும் ஊழலை ஒழிக்க, சேவை பெறும் உரிமைச் சட்டம் என்ற சிறந்த ஆயுதம் இருக்கும் நிலையில், அதைப் பயன்படுத்த அரசு முன்வராதது வருத்தமளிக்கிறது.
தமிழ்நாட்டில் அப்பாவி பொதுமக்கள் மிகவும் அலைக்கழிக்கப்படும் இடம் எது? கடமையை செய்ய கையூட்டு பெறும் இடம் எது? என்று வினாக்கள் எழுப்பப்பட்டால், அதற்கு விடையாக இருப்பவை அரசு அலுவலகங்கள் தான். சாதிச் சான்று, பிறப்புச் சான்று, இறப்புச் சான்று, திருமணப் பதிவுச் சான்று, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, நில ஆவணங்களின் நகல்கள், மின் இணைப்பு, குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு வழங்குதல் ஆகியவை பொதுமக்களுக்கு தமிழக அரசால் வழங்கப்பட வேண்டிய இன்றியமையாதத் தேவைகள் ஆகும். ஆனால், எல்லாத் தகுதிகளும் இருந்தாலும் கூட, இவற்றில் எவையும் எளிதாகக் கிடைப்பதில்லை. கையூட்டு வழங்கினால் மட்டுமே கிடைக்கின்றன. மக்களும், மக்களுக்கு சேவை வழங்குபவர்களும் நேருக்கு நேர் சந்தித்தால் மட்டும் கையூட்டு வாங்க முடியும் என்ற எண்ணத்தில் பெரும்பான்மையான அரசு சேவைகளுக்கு பொதுச்சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கும் முறை சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டன. ஆனால், அவ்வாறு செய்ததால் கையூட்டு ஒழியவில்லை. மாறாக, கையூட்டு பெறுவதற்கான புதிய வழிமுறைகள் தான் உருவாக்கப்பட்டன. கையூட்டு வழங்கத் தவறுபவர்களுக்கு அரசின் சேவைகள் கிடைப்பதே இல்லை. இதை தமிழக அரசு மறுக்க முடியாது.
பல மாவட்டங்களில் நடைபெறும் ஆய்வுக் கூட்டங்களின் போது, மக்களுக்கு பல சான்றிதழ்களை வழங்க தாமதம் ஏற்படுவதாகவும், பல மாதங்களாக வழங்கப்படாமல் இருக்கும் சான்றிதழ்களை உடனே வழங்கவேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே ஆணையிட்ட முன்னுதாரணங்கள் உள்ளன. சேவை வழங்கல் குறைபாட்டுக்கு இதுவே சான்றாகும். இந்த நிலையை மாற்றுவதற்கு ஒரே தீர்வு பொதுச்சேவை உரிமை சட்டத்தை செயல்படுத்துவது தான். இதை கடந்த பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. கடந்த காலங்களில் இக்கோரிக்கையை வலியுறுத்தி வழக்குகள் தொடரப்பட்டபோது, ‘தமிழகத்தில் நட்புறவுடன் கூடிய மக்கள் நிர்வாகம், குடிமக்கள் அணுகுமுறை, மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கால அவகாசம் ஆகிய திட்டங்கள் 1997 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையில் இருப்பதால் சேவை பெறும் உரிமைச் சட்டம் தேவையில்லை’ என்று தமிழக அரசு விளக்கமளித்தது. ஆனால், இந்தத் திட்டங்கள் எதுவுமே பொதுமக்களுக்கு குறித்த நேரத்தில் சேவை கிடைப்பதையோ, கையூட்டு ஒழிக்கப்படுவதையோ உறுதி செய்யவில்லை. அதனால் தான் அரசு அலுவலகங்கள் மக்களுக்கு சேவை வழங்கும் இடங்களாக இருப்பதை உறுதி செய்ய சேவை உரிமைச் சட்டம் தான் ஒரே தீர்வு என பா.ம.க. வலியுறுத்தி வருகிறது.
தமிழ்நாட்டில் பொதுச்சேவை சட்டம் இயற்றப்பட்டால், சாதிச்சான்றிதழ் பிறப்புச் சான்று, இறப்புச் சான்று, திருமண பதிவுச் சான்று, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, நில ஆவணங்களின் நகல்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் மக்களுக்கு வழங்கப்படுவதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்படும். குறித்த காலத்தில் சேவை கிடைக்காத மக்களுக்கு ரூ.10,000 வரை இழப்பீடு வழங்கவும் வகை செய்யப்படும். அதனால், அதிகாரிகள் குறித்த நேரத்தில் சேவை வழங்குவார்கள். பொதுச்சேவை பெறும் உரிமை சட்டம் அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட 20 மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது. அந்த 20 மாநிலங்களையும் விட தமிழ்நாட்டில் தான் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தேவை அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டில் 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொண்டு நிறுவனம் ஒன்று நடத்திய கணக்கெடுப்பில், அரசின் சேவைகளைப் பெற கையூட்டு வழங்க வேண்டியிருப்பதாக 93 விழுக்காட்டினரும், அரசின் சேவைகளை பெறுவதில் ஏற்பட்ட அனுபவம் மனநிறைவளிக்கும் வகையில் இல்லை என்று 82 விழுக்காட்டினரும் கூறியுள்ளனர்.
எனவே, தமிழக அரசின் சேவைகள் பொதுமக்களுக்கு குறித்த நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்ய பொதுச்சேவை பெறும் உரிமை சட்டம் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். நாளை தொடங்கவிருக்கும் சட்டப்பேரவையின் துணை நிதிநிலை அறிக்கைக் கூட்டத் தொடரில் இதற்கான சட்ட முன்வரைவை தாக்கல் செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.