பாஜகவுக்கு பதில் சொல்லும் வேகத்தை தமிழ்நாடு காங்கிரஸ் காட்டவில்லை: ஈவிகேஎஸ் இளங்கோவன்!

”பாஜகவுக்கு பதில் சொல்லும் வேகத்தை தமிழ்நாடு காங்கிரஸ் காட்டவில்லை என்பது எனக்கு குறைபாடு உள்ளது” என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது:-

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு யாரை தலைவராக போட்டாலும் அவர்களோடு ஒத்துழைக்க தயார் என கே.எஸ்.அழகிரி சொல்லிவிட்டார். நல்ல முடிவு விரைவில் வரும் என்று நினைக்கின்றேன். அவர் மீது தனிப்பட்ட காழ்புணர்ச்சி ஏதும் கிடையாது. இன்னும் கொஞ்சம் வேகமாக அவர் செயல்பட்டு இருக்கலாம்.
பாஜகவுக்கு பதில் சொல்லும் வேகத்தை தமிழ்நாடு காங்கிரஸ் காட்டவில்லை என்பது எனக்கு குறைபாடு உள்ளது. ஸ்டாலின் அவர்கள் வேகமாக பாஜகவை எதிர்க்கும்போது காங்கிரஸ் கட்சியும் அப்படி செய்தாக வேண்டும்.

அண்ணாமலை சொல்வதில் 75 சதவீதம் பொய்தான். 20 ஆயிரம் புத்தகங்களை படித்தவர் இப்படியா நடந்து கொள்வார் என எனக்கு தெரியவில்லை. இது ரொம்ப நாட்களுக்கு தாங்காது. விரைவிலேயே அண்ணாமலை தூக்கி எரியப்படுவார் என்று நினைக்கிறேன்.

காங்கிரஸ் கட்சி இன்னும் வேகமாக செயல்பட வேண்டும். காங்கிரஸ் கட்சியிலும் இளைஞர்கள் உள்ளார்கள். காமராஜருக்கு பிறகு மக்கள் தலைவராக காங்கிரஸ் கட்சியில் உருவாகவில்லை. ஏன் என்றால் அதற்கு காரணம் டெல்லி காங்கிரஸ் தலைமைதான். எம்ஜிஆருக்கு சமமாக மக்கள் செல்வாக்கு பெற்றவராக சிவாஜி இருந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியை சிவாஜி கேட்டபோது டெல்லி தலைமை மறுத்துவிட்டது. அதனால்தான் மக்களிடையே ஆழமாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. காங்கிரஸ் கட்சியில் தற்போது கோஷ்டியே இல்லை. உள்ளாட்சி தேர்தலில் திமுக, அதிமுகவுக்கு பிறகு காங்கிரஸ் கட்சிதான் மூன்றாவது இடத்தில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.