டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக இஸ்ரேல்- ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு இடையேயான போர் நடைபெற்று வரும் நிலையில், இந்த விவகாரம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதில், பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நில உரிமை, கண்ணியம், மரியாதைக்காக போராடும் பாலஸ்தீனிய மக்களுக்கு எப்போதும் காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் என்றும், உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என இருதரப்புக்கும் காங்கிரஸ் வலியுறுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இஸ்ரேல் மக்கள் மீதான மிருகத்தனமான தாக்குதல்களை இந்திய தேசிய காங்கிரஸ் கண்டிக்கிறது. இஸ்ரேலிய மக்களின் நியாயமான பாதுகாப்பு நலன்களை உறுதி செய்யும் அதேவேளையில் சுயமரியாதை, சமத்துவம் மற்றும் கண்ணியமான வாழ்க்கைக்கான பாலஸ்தீன மக்களின் நியாயமான விருப்பங்கள் பேச்சுவார்த்தைகள் மூலம் நிறைவேற்றப்பட வேண்டும். எந்தவொரு வன்முறையும் ஒருபோதும் தீர்வை வழங்காது. எனவே, போர் நிறுத்தப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக, இஸ்ரேல் மீதான ஹமாஸ் குழு தாக்குதலை “பயங்கரவாத தாக்குதல்கள்” என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, இஸ்ரேலுக்கு இந்தியா முழு ஆதரவு வழங்கும் எனவும் அறிவித்தார். தற்போது, பாலஸ்தீனத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் செயற்குழு கூட்டத்துக்கு பின் டெல்லியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒன்றிய அரசை வலியுறுத்துவது என காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒன்றிய பாஜக ஆட்சி ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் அல்லது ஆட்சியை விட்டு செல்ல வேண்டும். ஜாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய பாஜக அரசால் நடத்த முடியவில்லை என்றால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து. ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு பிறகே மக்களின் பொருளாதார நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
காங்கிரஸில் 4 முதலமைச்சர்களில் 3 பேர் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பாஜகவில் 10 முதலமைச்சர்கள் இருக்கிறார்கள்; அதில் ஒருவர்தான் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். பாஜகவில் உள்ள ஓபிசி பிரிவை சேர்ந்த ஒரு முதல்வரும் இந்த தேர்தலுக்குப் பிறகு முதல்வராக நீடிக்க மாட்டார்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் ஆற்றலும், ஆளுமையும் பிரதமர் மோடிக்கு இல்லை. பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக பிரதமர் மோடி என்ன செய்துள்ளார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான உரிமைகள் பாஜக ஆட்சியில் மறுக்கப்பட்டு வருகிறது. பட்டியல், பழங்குடியின, ஒபிசி பிரிவு மக்களை தவறாக வழிநடத்தவே பிரதமர் மோடி செயல்படுகிறார்.
சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைக்கும் என்று ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேசம், தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்; மிசோரமிலும் சிறப்பாக பங்காற்றுவோம் என்று கூறியுள்ளார்.