அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தார் செந்தில் பாலாஜி. அப்போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசு வேலை வாங்கி தருவதாகப் பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாகப் புகார் கிளம்பியது. இது தொடர்பாக பலரும் புகார் அளித்த நிலையில், அதன்படி வழக்கும் பதிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. இந்த விவகாரத்தில் முதலில் வருமானவரித்துறை ரெய்டு நடத்தியது. கடந்த மே மாதம் நடைபெற்ற இந்த ரெய்டில் தான் சில மோசமான சம்பவங்களும் நடைபெற்றது. வருமானவரித்துறை அதிகரிக்களுக்கு எதிராக போராட்டம், சில இடங்களில் அதிகாரிகளை சிறை பிடித்த சம்பவங்களும் கூட நடைபெற்றது. அதன் பிறகு மீண்டும் கடந்த ஜூன் மாதம் அமலாக்கத் துறை ரெய்டு நடத்தியது.
அதிகாலையில் தொடங்கிய அந்த ரெய்டு நள்ளிரவு வரை நீட்டித்தது. இறுதியில் அன்று இரவு அவர் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்படவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு இதயத்தில் மொத்தம் 4 இடங்களில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், அவருக்கு உடனடியாக ஆப்ரேஷன் செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். அதைத் தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்ட நிலையில், அவருக்கு அங்கே ஆப்ரேஷனும் நடைபெற்றது. அதன் பிறகு அவரது உடல்நிலையை மருத்துவர்கள் சில நாட்கள் கவனித்த நிலையில், அதன் தொடர்ந்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அமலாக்க துறை அவரை காவலில் எடுத்தும் விசாரணை நடத்தினர். புழல் சிறையில் இருந்த அவரை சென்னையில் உள்ள அமலாக்க துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தொடர்ந்து செந்தில் பாலாஜி புழல் சிறையிலேயே இருந்து வந்தார்.
இதற்கிடையே திடீரென இன்று காலை அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ரத்த கொதிப்பு மற்றும் நீரிழிவு நோய்களுக்காக அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சிறையில் அடைக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு இன்று காலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு சிறையில் ரத்த அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கே மருத்துவர்கள் அவரை சோதித்த நிலையில், உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்தினர். அதன்படி அவர் இன்று மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது கருப்பு நிற உடை அணிந்திருந்த செந்தில் பாலாஜியால் நடக்கவே முடியவில்லை. அவரை வீல் சேரில் வைத்தே மருத்துவமனைக்கு அதிகாரிகள் அழைத்து வந்தனர். செந்தில் பாலாஜிக்கு ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில், மருத்துவர்கள் ஆலோசனைப்படி தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு முழு உடல்நிலை பரிசோதனையும் செய்யப்பட்டது. சிகிச்சை முடிந்த பிறகு அவர் மருத்துவமனையில் இருந்து தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கடந்த ஜூன் மாதம் முதல் செந்தில் பாலாஜி சிறையில் இருக்கிறார். அவருக்கு வரும் அக். 13ஆம் தேதி வரை 7ஆவது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.