5 மாநில சட்டசபை தேர்தல் என்பது லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்டம்: வைகோ!

5 மாநில சட்டசபை தேர்தல் என்பது லோக்சபா தேர்தலுக்கு ஒருவகையில் முன்னோட்டமாக இருக்கும். என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.

மதிமுக தொடங்க உயிர்த் தியாகம் செய்த நொச்சிப்பட்டி தண்டபாணி, இடி மழை உதயன், மேலப்பாளையம் ஜஹாங்கீர், உப்பிலியாபுரம் வீரப்பன், கோவை காமராசபுரம் பாலன் ஆகியோரின் நினைவைப் போற்றும் வகையில் அக்கட்சி சார்பாக அக்டோபர் 10-ந் தேதி சூளுரை நாள் கடைபிடிக்கப்படுகிறது. திமுகவில் இருந்து வைகோ வெளியேற்றப்பட்ட போது அதைக் கண்டித்து தீக்குளித்த உயிரிழந்தவர்கள் இவர்கள். சென்னை மதிமுக தலைமை அலுவலகத்தில் வைகோ தலைமையில் உயிர் தியாகம் செய்தவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் “தமிழ்த் திருநாட்டின் உயர்வுக்காகவும், தமிழர்களின் மேன்மைக்காகவும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் தொடர்ந்து பாடுபடும் என்ற சூளுரை ஏற்கப்பட்டது. இந்நிகழ்வில் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ, துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, மாவட்ட செயலாளர்கள் வடசென்னை கிழக்கு சு.ஜீவன், தென் சென்னை கிழக்கு கே. கழகக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்வுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது:-

காவிரி பிரச்சனையில் தமிழ்நாடு அரசு கர்நாடகா அரசை வலியுறுத்தவே செய்கிறது. மத்திய அரசுக்கு எந்த விதத்தில் அழுத்தம் தர முடியுமோ அதை செய்து கொண்டிருக்கிறோம். நானும் துரைமுருகன் உள்ளிட்டோரும் டெல்லி சென்றோம். தமிழ்நாட்டு எம்.பிக்கள் அனைவரும் சென்றோம். மத்திய அரசுக்கு அழுத்தம் தரும் அதே நேரத்தில் உச்சநீதிமன்றமும் காவிரி மேலாண்மை ஆணையமும் தமிழ்நாட்டுக்கு காவிர் நீர் தர வேண்டும் என்றது. ஆனால் கர்நாடகா அரசு பொருட்டாக மதிக்கவில்லை. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையே பொருட்டாக கருதாமல் உதாசீனம் செய்துவிட்டு தமிழ்நாட்டுக்கு வஞ்சகம் செய்கிறது கர்நாடகா. மூன்றரை லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் கருகி காய்ந்து கொண்டிருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை தொடங்கி இருக்கிறோம். பொதுக்குழுவுக்குப் பின்னர் மாவட்ட வாரியாக வாக்குச் சாவடி முகவர்கள் தேர்வுக்கான கூட்டம் நடைபெறுகிறது. திமுக கூட்டணியில் பேச்சுவார்த்தையே தொடங்கவில்லை. எங்கள் எண்ணம் என்ன என்பதை பத்திரிகையாளர்களிடம் தெரிவிக்க முடியாது. 5 மாநில சட்டசபை தேர்தல் என்பது லோக்சபா தேர்தலுக்கு ஒருவகையில் முன்னோட்டமாக இருக்கும். இந்தியா கூட்டணி வலுவாகவே இருக்கிறது. நிச்சயமாக தேர்தலில் வெற்றி பெறும். இவ்வாறு வைகோ கூறினார்.