தஞ்சை வேளாண் கல்லூரிக்கு டாக்டர் எம்எஸ் சுவாமிநாதன் பெயர்: முதல்வர் ஸ்டாலின்!

தஞ்சாவூர் வேளாண்மை கல்லூரி ஆராய்ச்சி மையத்திற்கு மறைந்த டாக்டர் எம்எஸ் சுவாமிநாதன் பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன், எம் எஸ் சுவாமிநாதன் என்று பிரபலமாக அறியப்பட்டவர், புகழ்பெற்ற வேளாண் விஞ்ஞானியும், நாட்டின் ‘பசுமைப் புரட்சி’யின் முக்கிய சிற்பியுமான எம்.எஸ்.சுவாமிநாதன். பயிற்சியின் மூலம் தாவர மரபியல் நிபுணரும், சென்னையிலுள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் நிறுவனர் தலைவராகவும், தலைமை ஆலோசகராகவும் செயல்பட்டவர். உலகளாவிய உணவு முறைகளின் நிலைத்தன்மையுடன், அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்தல். விவசாயிகளுக்கான இந்திய அரசின் தேசிய ஆணையத்தின் தலைவராகவும், அறிவியல் மற்றும் உலக விவகாரங்களுக்கான பக்வாஷ் மாநாடுகளின் தலைவராகவும், உணவுப் பாதுகாப்புக்கான உலகக் குழுவின் (CFS) உயர்நிலை நிபுணர் குழுவின் (HLPE) தலைவராகவும் பணியாற்றியவர். இந்திய ராஜ்யசபா உறுப்பினர், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் தலைமை இயக்குநர். இந்தியாவின் பசுமைப் புரட்சியில் அவரது தலைமைத்துவத்துக்காக முதல் உலக உணவுப் பரிசு மற்றும் பத்ம விபூஷன், ராமன் மகசேசே விருது உட்பட பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகளைப் பெற்றவர்” என்று எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

1960களில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டபோது அமெரிக்காவில் இருந்து கோதுமை இறக்குமதி செய்யப்பட்டது. ‘இந்தியர்களால் உணவு உற்பத்தி செய்ய முடியாது. பசியால் கொத்துக் கொத்தாக உயிரிழப்பார்கள்’ என்று பல நாடுகள் கூறின. இதை பொறுத்துக்கொள்ள முடியாத இவர், ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய ரக கோதுமையை இந்தியாவில் அறிமுகம் செய்து, அதிக உற்பத்தியையும், 200 சதவீத லாபத்தையும் சாதித்துக் காட்டினார். இதை ‘கோதுமைப் புரட்சி’ என்று பாராட்டினார் பிரதமர் இந்திரா காந்தி.

சீன நெல் வகைகளை அறிமுகம் செய்து நெல் விளைச்சலிலும் இந்தியாவை தன்னிறைவு பெறவைத்தார். நாட்டின் முதுகெலும்பான வேளாண் துறையில் அபரிமித வளர்ச்சியை ஏற்படுத்தி உலக அரங்கில் இந்தியாவை தலைநிமிரச் செய்தார். உணவுப் பொருட்களை இறக்குமதி செய்த நிலை மாறி, வேளாண் உற்பத்தி பொருட்களை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிலையை உருவாக்கினார். ‘பட்டினி இல்லாத இந்தியாதான் என் கனவு’ என்பார். எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையை 1988ஆம் ஆண்டில் நிறுவினார். இந்தியாவிலும் உலக அளவிலும் புகழ்பெற்ற ஆய்வு நிலையங்களில் பேராசிரியர், ஆராய்ச்சி நிர்வாகி, தலைவர் ஆகிய பதவிகளை வகித்தார். மத்திய வேளாண்மைத் துறைச் செயலாளர், மத்திய திட்டக் குழு உறுப்பினர் போன்ற பதவிகளை வகித்தவர். கிராமப்புற மக்களின் மேம்பாடு, வேளாண் ஆராய்ச்சிகளுக்காக கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ‘வால்வோ’ விருது, ராமன் மகசேசே விருது உட்பட தேசிய மற்றும் சர்வதேச அளவில் 40-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றவர். உலகம் முழுவதும் உள்ள 38 பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன.

இதனிடையே சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் இன்று விதி எண் 110ன் கீழ் அறிக்கை ஒன்றினை வாசித்தார். அப்போது முதல்வர் ஸ்டாலின், காலநிலை மாற்றம்தான் மிகப்பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. காலநிலை மாற்றம் குறித்து 1969ம் ஆண்டிலேயே இந்திய அறிவியல் மாநாட்டில் எம்.எஸ்.சுவாமிநாதன் பேசியுள்ளார் என புகழாரம் சூட்டினார். வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் குறித்து பேரவையில் அறிவிப்பு வெளியிடுவதில் பெருமையாக உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கருணாநிதி ஆட்சி காலத்தில் வேளாண் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டு உணவு உற்பத்தியில் புரட்சி செய்யப்பட்டது. வேளாண் ஆராய்ச்சி மையங்கள் உருவாக்கப்பட்டு, உணவு உற்பத்தியில் புரட்சி செய்த வெற்றிகரமான மாடலாக கலைஞர் மாடல் உள்ளது. தஞ்சை ஈச்சங்கோட்டையில் உள்ள வேளாண் கல்லூரிக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயர் வைக்கப்படும். அதிக மதிப்பெண் பெறும் வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் விருது வழங்கப்படும். வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இனி டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண் கல்லூரி, ஆராய்ச்சி நிலையம் என அழைக்கப்படும் என தெரிவித்தார்.