சட்டப்பிரிவு 61 ஐ பயன்படுத்தி இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யுங்க: தமிமுன் அன்சாரி

இஸ்லாமிய சிறைக்கைதிகளை விடுதலை செய்யக்கோரி இன்று சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் முற்றுகைப் போராட்டம் நடத்திய தமிமுன் அன்சாரி, தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

‘சட்டப்பிரிவு 161 ஐ பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்ததுபோல், 20 ஆண்டுகளாக சிறையில் உள்ள இஸ்லாமிய சிறைக்கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்’ எனக் கோரி மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் சென்னை ஐஸ்ஹவுஸ் மசூதி அருகே இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், சுமார் 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்தப் போராட்டத்தின்போது மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி பேசியதாவது:-

20 ஆண்டுகளை கடந்து தமிழ்நாட்டில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருக்கும் சிறைவாசிகளை விடுவிக்க கோரி கூடியுள்ளோம். நேற்று 5 கட்சிகள் தமிழக சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தன. அக்கட்சிகளுக்கு நன்றி. ஆனால், முதலமைச்சர் இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு அளித்த பதில் மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. ஆளுநருக்கு அனுப்பி இருக்கிறோம், ஆளுநர் முடிவெடுத்த பிறகு விடுதலை செய்கிறோம் எனக் கூறியுள்ளார். ஆளுநரிடம் எந்த விடையும் கிடைக்காது என்பது முதல்வருக்கும் தெரியும், தமிழ்நாட்டு மக்களுக்கும் தெரியும். ஆளுநரிடம் ஏற்கனவே 22 மசோதாக்களுக்கு பதில் வரவில்லை. ஆகவே தமிழக அரசு அமைச்சரவையைக் கூட்டி, சட்டப்பிரிவு 161 ஐ பயன்படுத்தி பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுதலை செய்ததுபோல், 20 ஆண்டுகளாக சிறையில் உள்ள இஸ்லாமிய சமூகத்தினரை விடுதலை செய்ய வேண்டும்.

முதலமைச்சர் ஸ்டாலின் கனிவான உள்ளத்தோடு, சாதி, மத, பேதம் இன்றி 20 ஆண்டுகள் கடந்த அனைத்து சிறைவாசிகளையும் விடுவிக்க வேண்டும். தமிழக அரசு அமைச்சரவையை கூட்டி 161ஆவது சட்ட பிரிவை நிறைவேற்றிய பின், ஆளுநருக்கு தீர்மானத்தை அனுப்பி வைத்துவிட்டால் அடுத்து எங்கள் போராட்டம் எல்லாம் ஆளுநர் மாளிகையை நோக்கித்தான் இருக்கும். தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்தகட்டமாக திருச்சியில் மத்திய சிறையை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவோம். இந்த கோரிக்கையை முன்வைத்து எந்தக் கட்சி போராட்டத்தை நடத்தினாலும் வேறுபாடின்றி உடன் நிற்போம். இவ்வாறு அவர் கூறினார்.

சென்னையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட தமிமுன் அன்சாரி உள்ளிட்ட மனிதநேய ஜனநாயக கட்சியினர் சுமார் 150 பேர், கைது செய்யப்பட்டு வேனில் அழைத்துச் செல்லப்பட்டனர்.