கோவை குண்டுவெடிப்பு இஸ்லாமிய சிறை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற அதிமுகவின் நிலைப்பாட்டை இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் கடுமையாக விமர்சித்துள்ளார்.
1998-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி லோக்சபா தேர்தல் பிரசார காலம். அப்போது பாஜகவின் நிறுவனத் தலைவர் எல்.கே. அத்வானி பிரசாரத்துக்காக கோவை வரும் தருணத்தில் 18 இடங்களில் பயங்கர குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. மொத்தம் 58 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 1993-ம் ஆண்டு மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலைப் போல கோவையை உருக்குலைத்துப் போட்டது இந்த நாசகார சதி செயல். இந்த கோவை குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு கோவை பாஷா தலைமையிலான அல் உம்மா என்ற தீவிரவாத இயக்கம்தான் காரணம் என போலீசார் குற்றம்சாட்டினர். இதனையடுத்து அல் உம்மா இயக்கம் தடை செய்யப்பட்டது. கோவை பாஷா உட்பட அந்த இயக்கத்தினர் ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.
பல்லாண்டுகாலமாக சிறையில் இருக்கும் இவர்கள் உள்ளிட்ட இஸ்லாமிய சிறை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை. இது தொடர்பாக சட்டசபை தேர்தலின் போது தற்போதைய ஆளும் திமுகவும் வாக்குறுதி அளித்திருந்தது. அதேநேரத்தில் திமுக ஆட்சியில் சிறைக் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யலாம் என்ற அரசின் கோப்புக்கு ஆளுநர் தரப்பில் ஒப்புதல் தரப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் இஸ்லாமிய சிறை கைதிகள் விடுதலை தாமதமாகி வருகிறது. இதனிடையே தமிழ்நாடு சட்டசபையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இஸ்லாமிய சிறை கைதிகள் விடுதலை தொடர்பாக குரல் கொடுத்தார்; தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு பல்வேறு முஸ்லிம்கள் அமைப்புகளின் தலைவர்கள் எடப்பாடி பழனிசாமியை நேரில் சென்று சந்தித்து நன்றி தெரிவித்தும் வருகின்றனர்.
அதிமுகவின் இந்த நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்துள்ளார் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத். இது தொடர்பாக தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அர்ஜூன் சம்பத், அ.இ.அண்ணா தி.மு.க வா! அ.இ.ஜின்னா தி.மு.க வா! குண்டு வைத்த இமாம் அலியை என்கவுண்டர் செய்தது ஜெயலலிதா அரசு! இந்து முன்னணி நாட்டுக்குத் தேவை என்றார் எம்ஜிஆர்! அதிமுக கொள்கைகளுக்கு துரோகம்! இஸ்லாமியஓட்டு வங்கிக்காக எடப்பாடியார் குண்டுவெடிப்பு கைதிகள் விடுதலை கோருவது தவறு!ஆபத்து என விமர்சித்துளார்.