அனிதா ராதாகிருஷ்ணன் 60 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து குவிப்பு: அமலாக்கத்துறை

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் 60 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து குவித்துள்ளதற்கான ஆதாரம் இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

அதிமுகவில் இருந்து திமுகவிற்கு வந்தவர் அனிதா ராதாகிருஷ்ணன். ஜெயலலிதா தலைமையிலான அரசில் நகர்புற மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த அனிதா கிருஷ்ணன் தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் மீன்வளத்துறை அமைச்சராக உள்ளார். இவர் மீது 2006 முதல் 2011 வரையிலனா திமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத் துறையால் சொத்துக் குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த சொத்து குவிப்பு வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு அனிதா ராதாகிருஷ்ணன் மீது அமலாக்கத்துறை பண மோசடி வழக்கு பதிவு செய்தது. மேலும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக கூறி அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினரின் ரூ.6.5 கோடி மதிப்பிலான சொத்துக்களையும் அமலாக்கத்துறை முடக்கியது.

அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தங்களை இணைக்கக்கோரி தூத்துக்குடி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுத்தாக்கல் செய்தது. அப்போது கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை தனது தரப்பு வாதங்களை முன்வைத்தது.

இந்நிலையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்து குவிப்பு வழக்கு நீதிபதி செல்வம் முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் 60 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து சேர்த்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்தார். மேலும் அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்ந்து அமைச்சராக இருப்பதால் சொத்துக்குவிப்பு வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை முறையாக விசாரணை நடத்தவில்லை என்றும் அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞரான ரமேஷ் தெரிவித்தார். ஆனால் அமலாக்கத்துறையின் மனுவை ஏற்க வேண்டாம் என லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் வாதிடப்பட்டது.

சுமார் 50 நிமிடம் நடைபெற்ற இந்த வாதங்கள் நிறைவு பெறவில்லை. இதையடத்து வழக்கு விசாரணையை வரும் நவம்பர் 1ஆம் தேதிக்கு நீதிபதி செல்வம் ஒத்தி வைத்தார். கடந்த முறையே வாதங்கள் நிறைவடைந்த நிலையில் அன்று தீர்ப்பு வழங்கப்படலாம் என தகவல் வெளியானது. ஆனால் வழக்கு விசாரணை நேற்றறைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்றும் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் நவம்பர் ஒன்றாம் தேதி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.