இஸ்லாமிய சிறைக்கைதிகளுக்கு மட்டும் பாரபட்சம் பார்க்கப்படுகிறது: சீமான்!

”பத்து ஆண்டுகள் தண்டனை பெற்ற எல்லோரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற சட்டம் உள்ள நிலையில் இது இஸ்லாமிய சிறைக்கைதிகளுக்கு மட்டும் பாரபட்சம் பார்க்கப்படுகிறது” என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுக்க கூடாது என்பதுதான் கர்நாடகாவின் அரசியல். ஒரே நாடு என்றால் அந்நாட்டு வளங்கள் எல்லாம் எல்லோருக்கும் பொது என்பதுதானே அர்த்தம். ஆனால் இது தமிழ்நாட்டுக்கு மட்டுமே பொருந்துகிறது என்றால் என்ன நியாயம். நாடாளுமன்றத் தேர்தலை பொறுத்தவரை எங்களுக்கு ஒரே நிலைப்பாடுதான் தனித்துதான் போட்டியிடுகிறோம் என தெரிவித்தார்.

ஜெகத்ரட்சகன் வீடுகளில் நடைபெற்ற ரெய்டு குறித்த கேள்விக்கு, அதிகாரத்தில் இருப்பவர்கள் இதை செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள். இது ஒரு அரசியல் பழிவாங்கல்தான். இந்தியா எனும் கூட்டணியை தொடங்குவதால் இது போன்ற நெருக்கடிகளை தருவதுதான். ஜெகத்ரட்சகன் என்ன இன்று காலையில் பணக்காரர் ஆகிவிட்டாரா?; இதை ரசித்து சிரித்துக் கொள்ள வேண்டியதுதான், ஒன்றும் செய்ய முடியாது என கூறினார்.

அணைகள் குறித்து பேசிய அவர், வெறும் 36 கி.மீ., ஓடும் பாலாற்றில் ஆந்திராவில் 5 கி.மீ ஒரு தடுப்பனை உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் ஒரு தடுப்பணை கூட இல்லை. நாங்கள் எப்படி அணையை கட்டுவோம்; பல துணைகளை வேண்டுமானால் கட்டுவோம் என கூறினார்.

பத்து ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்ற எல்லோரையும் விடுதலை செய்யலாம் என்ற விதி உள்ளது. ஆனால் 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் இஸ்லாமிய சிறைக்கைதிகள் விடுதலை செய்யவில்லை. இஸ்லாமிய சிறைக்கைதிகளுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. பத்து ஆண்டுகள் தண்டனை பெற்ற எல்லோரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற சட்டம் உள்ள நிலையில் இது இஸ்லாமிய சிறைக்கைதிகளுக்கு மட்டும் பாரபட்சம் பார்க்கப்படுகிறது. நீதிமன்றம் சொன்னாலும் திமுக அரசு விடுதலை செய்ய மறுக்கிறது. இஸ்லாமிய சிறைக்கைதிகள் வெளியே வந்தால் இந்து அமைப்பின் தலைவர்களுக்கு ஆபத்து என திமுக அரசு வாதிடுகிறது. கேட்டால் இஸ்லாமியர்களுக்கு நாங்கள்தான் பாதுகாப்பு என திமுக கூறுகிறது என்றார்.