மோசடி வழக்கில் தளர்வோடு ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம்!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இடைக்கால ஜாமீனில் இருந்த நிலையில் தளர்வோடு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. இவர் பால்வளத்துறை அமைச்சராக செயல்பட்டார். அந்த சமயத்தில் ஆவினில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3 கோடி பணமோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து அவர் முன்ஜாமீன் கோரினார். ஆனால் அந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடியானது. இதனால் கைது நடவடிக்கைக்கு பயந்து அவர் தலைமறைவானார். அவரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். பல நாட்கள் தேடுதலுக்கு பிறகு கர்நாடகாவில் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டார். கர்நாடகாவில் ஹாசனில் செந்தில் பாலாஜியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் திருச்சி மத்திய சிறையில் இருந்தார்.

இதையடுத்து அவர் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ராஜேந்திர பாலாஜிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. வெளிமாநிலங்கள் செல்ல வேண்டும் என்றால் சென்னை உயர்நீதிமன்றத்தின் அனுமதியில் தான் செல்ல வேண்டும் என நிபந்தனை விதித்தது. அதோடு இடைக்கால ஜாமீன் காலம் அவ்வப்போது நீட்டிப்பு செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் தான் இடைக்கால ஜாமீன் முடிவடையும் நிலையில் ராஜேந்திர பாலாஜி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று செய்யப்பட்டது. அதில் இடைக்கால ஜாமீன் நிறைவடைய உள்ளது. இதனால் ஜாமீன் நீட்டிப்பு செய்ய வேண்டும். அதோடு சென்னை உயர்நீதிமன்ற அனுமதியுடன் வெளிமாநிலங்களுக்கு செல்ல வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்த வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் போபண்ணா, சுந்தரேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் நீட்டிப்பது குறித்து தமிழக அரசிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு தமிழக அரசு சார்பில், ‛‛இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும். இருப்பினும் ஜாமீன் நீட்டிப்பு செய்ய ஆட்சேபனை இல்லை” என தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு வழங்கிய இடைக்கால ஜாமீனை காலவரையறையின்றி நீட்டிப்பு செய்தது. அதோடு வெளிமாநிலம் செல்லும்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் அனுமதி பெற வேண்டாம் எனவும், மாறாக வெளிநாடு சென்றால் சென்னை உயர்நீதிமன்றத்தின் அனுமதியை கட்டாயம் பெற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது. இதன்மூலம் ராஜேந்திர பாலாஜியின் இடைக்கால ஜாமீன், ஜாமீனாக மாறியுள்ளது.