காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோரை அழைத்து திமுக சார்பில் மகளிர் உரிமை மாநாடு நடத்திய நிலையில், தமிழ்நாட்டில் பெண்களுக்கு சுத்தமாக பாதுகாப்பே இல்லாத நிலை நிலவி வருவதாக கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவை கடுமையாக விமர்சித்து வரும் பாஜக தலைவர்களில் வானதி சீனிவாசனும் முக்கியமானவராக விளங்குகிறார். திமுக அரசு முன்னெடுக்கும் அனைத்து திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளையும் பாஜக மேலிடத்தின் தமிழ் குரலாக விமர்சித்து வருகிறார். குறிப்பாக, சனாதன பிரச்சினை, இந்து கோயில்களின் கட்டுப்பாடு உள்ளிட்ட விவகாரங்களில் தமிழக அரசை காட்டமாக விமர்சித்து இருக்கறார்.
இந்நிலையில், நேற்று திமுக அரசு சார்பில் மகளிர் உரிமை மாநாடு நடத்தப்பட்டது. காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, மெகபூபா முப்தி, கனிமொழி உள்ளிட்ட பெண் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த சூழலில், திமுகவின் இந்த மகளிர் உரிமை மாநாட்டை விமர்சிக்கும் வகையில் தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் பாஜக எம்.பி. வானதி சீனிவாசன். அதில் தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறி ஒரு லிஸ்ட்டையே போட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “432 பாலியல் வன்கொடுமைகள், 29 வரதட்சணை சம்பந்தமான மரணங்கள், 1043 வன்கொடுமை சம்பவங்கள், 1414 பாலியல் அத்துமீறல்கள் என 2022-ம் ஆண்டில் மட்டும் பெண்களுக்கு எதிராக 2918 குற்றங்கள் நடந்துள்ளன. தமிழ்நாட்டையே மதுவுக்கு அடிமையான மாநிலமாக மாற்றியுள்ள திமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை” என வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.