கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிமுகவை மிகக் கடுமையாக விமர்சித்தார். மக்கள் பிரச்சினையைப் பேச அதிமுக தயாராக இல்லை என அவர் சாடினார்.
சென்னை அண்ணாநகரில் நேற்று கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்குக் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி கூறியதாவது:-
ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் திமுக எப்போதும் மாணவர்கள் பக்கமே இருக்கும். மாணவர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம் தான் திமுக. பிரதமர் மோடி 2020இல் இந்தியாவை வல்லரசாக மாற்றுவேன் என்றே 2014இல் கூறினார். ஆனால், இப்போது 2047இல் தான் வல்லரசாக மாற்றுவேன் என்கிறார். ஆனால், ஒரு விஷயத்தில் நாம் பிரதமர் அவரை பாராட்டியே ஆக வேண்டும். இந்தியாவை மாற்றுகிறேன் மாற்றுகிறேன் என்று சொன்ன அவர், இப்போது இந்தியாவின் பெயரை மாற்றுகிறார். முதலில் நீட் தேர்வைக் கொண்டு வந்து அவர்கள் மாணவர்களின் மருத்துவ கனவைச் சிதைத்தார்கள். இப்போது மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் இடங்கள் தொடங்கவும் தடை செய்துள்ளனர்.
கடந்த 9 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு 5 லட்சம் கோடி வரி செலுத்தியுள்ளது. ஆனால், இந்க காலகட்டத்தில் நமக்கு வெறும் இரண்டு லட்சம் கோடி மட்டுமே திரும்ப வந்துள்ளது. அதேநேரம் 3 லட்சம் கோடி ரூபாய் வரி செலுத்தும் உத்தரப் பிரதேசத்திற்கு 9 லட்சம் கோடி ரூபாயைக் கொடுத்துள்ளனர். இது மட்டுமா இந்த 9 ஆண்டுகளில் 7.5 லட்சம் கோடிக்குக் கணக்கே இல்லை என்கிறது சிஏஜி. மத்திய அரசு அனைத்து துறைகளிலும் தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சித்தே வருகிறது. இந்த 9 ஆண்டுகளில் மோடி அரசால் பயனடைந்த ஒரு நபர் அதானி தான்.
இப்போது தமிழ்நாட்டில் உள்ள எதிர்க்கட்சிக்கு நாற்காலி மட்டுமே ஒரே பிரச்சினையாக இருக்கிறது. சட்டப்பேரவையில் மக்கள் பிரச்சனை குறித்துப் பேசாமல் நாற்காலி உரிமை குறித்து மட்டுமே பேசுகிறார்கள். கருணாநிதி உடல்நிலை பாதிக்கப்பட்ட சமயத்தில், அவர் எளிதாக வந்து செல்ல இருக்கை வசதி கேட்டோம். அதைக் கூடச் செய்து தராதவர்கள் இப்போது நாற்காலியைப் பற்றிப் பேசுகிறார்கள். அடுத்து இப்போது பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியதாக புது நாடகத்தைத் தொடங்கியுள்ளனர். மோடியா லேடியா எனக் கேட்டவர் ஜெயலலிதா.. ஆனால் மோடி தான் டாடி என்கிறார்கள் இப்போதைய அதிமுகவினர். நீட், ஜிஎஸ்டி, உதய் மின் திட்டம், தேசிய கல்விக்கொள்கை, வேளாண் விரோத சட்டம் என அனைத்து மக்கள் விரோத சட்டங்கள் அனைத்தையும் ஆதரித்ததே இந்த அதிமுகதான். இப்போது கூட்டணியை முறித்துக் கொண்டதாகச் சொல்கிறார்கள். ஆனால், கூட்டணி முறிவு எனச் சொல்லிவிட்டு அதிமுக தலைவர்கள் டெல்லி சென்றது அனைவருக்கும் தெரியும். இந்த நாடகத்தைத் தமிழ்நாடு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.. அதிமுக பாஜக இரண்டுமே ஒன்று தான் என மக்களுக்குத் தெரியும். அடிமைகள் மற்றும் பாசிஸ்டுகளை மக்கள் ஏற்க மாட்டார்கள். இந்தியா கூட்டணி 2024 தேர்தலில் பாஜகவை விரட்டி நாட்டிற்கு விடியல் பெற்றுத்தரும். இவ்வாறு அவர் பேசினார்.