எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் நீடிப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், வழக்கின் விசாரணையை நவம்பர் 3-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுப்புரத்தினம் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தனது வேட்புமனுவில் சொத்து, கல்வித் தகுதி உள்ளிட்ட விவரங்களை மறைத்து, தவறான தகவல்களை தெரிவித்துள்ளார். வேட்புமனுவில் சொத்து விவரங்கள், கல்வித் தகுதியை மறைத்த செயல் தவறான நடத்தை மட்டுமின்றி, ஊழல் நடவடிக்கையும் ஆகும்.
சொத்துகள் குறித்த விவரங்களை மறைத்ததுடன், எம்எல்ஏவாக பெற்ற ஊதியத்தையும் அவர் தெரிவிக்கவில்லை. சொத்து விவரங்களை மறைத்தது தொடர்பாக சேலம் நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த மனுவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதனால் எடப்பாடி தொகுதி எம்எல்ஏவாக செயல்பட பழனிச்சாமிக்கு தடை விதிக்க வேண்டும். எந்த தகுதியின் அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவராகவும், எம்எல்ஏவாகவும் அவர் பதவியில் நீடிக்கிறார் என்பது குறித்து விளக்கமளிக்க உத்தரவிட வேண்டும். மேலும், அவரை பதவி நீக்கம் செய்து, அவருக்கு வழங்கப்பட்ட ஊதியத்தை திரும்ப வசூலிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “வேட்புமனுவில் தகவல்களை மறைத்ததால், ரிட் மனு (கோ வாரண்டோ) தாக்கல் செய்யலாம். அதன் அடிப்படையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.மேலும், வேட்புமனுவில் தகவல்களை மறைத்துள்ளதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை எடப்பாடி பழனிச்சாமி மறுக்கவில்லை” என வாதிடப்பட்டது.
அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், “வேட்புமனுவில் தவறான தகவல் தெரிவிப்பது தகுதி இழப்பு ஆகாது. இதுதொடர்பாக, தேர்தல் வழக்குதான் தாக்கல் செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, வேட்புமனுவில் தவறான தகவல் தெரிவித்திருந்தால் தேர்தல் வழக்கு மட்டுமே தாக்கல் செய்ய முடியும். தகுதி இல்லாதவர் பதவி வகிப்பதை எதிர்த்துதான் கோ வாரண்டோ வழக்கு தாக்கல் செய்ய முடியும். இந்த வழக்கை தாக்கல் செய்ய முடியாது என சுட்டிக்காட்டினார். அப்போது மனுதாரர் தரப்பில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இந்த வழக்கை தாக்கல் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், வேட்புமனுவில் தவறான தகவல் தெரிவித்தால் கோ வாரண்டோ வழக்கை தாக்கல் செய்யலாம் என்பது தொடர்பான தீர்ப்புகளை தாக்கல் செய்ய மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 3-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.