காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையைப் பெற்றுத் தருவதில் திமுக அரசு தோல்வியடைந்துவிட்டது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுக அரசை மிகக் கடுமையாக விமர்சித்தார்.
சென்னையில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி கூட்டம் ஓட்டேரியில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். தேர்தலுக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவர் பேசினார். இந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் ஜெயக்குமார் கூறியதாவது:-
காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையைப் பெற்றுத் தருவதில் திமுக அரசு தோல்வியடைந்துவிட்டது. நான்கரை லட்சம் ஏக்கர் சாகுபடி பாழாகிவிட்டது. காவிரி நீர் விவகாரம் குறித்து சோனியா காந்தியிடம் முதல்வர் எந்தவொரு கோரிக்கையையும் முன்வைக்கவில்லை. தமிழ்நாட்டில் வசிக்கும் பொதுமக்கள், வியாபாரிகள் என யாருக்கும் பாதுகாப்பே இல்லாத சூழலே இப்போது நிலவுகிறது. இங்கே குற்றங்கள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. ஆதாய கொலைகள், கட்டப்பஞ்சாயத்து, செயின் திருட்டு சம்பவங்கள் எல்லாம் இப்போது சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. கனிமொழி: ஸ்டாலின் தனது கூட்டணியை நெல்லிக்காய் மூட்டை போலக் கட்டி வைத்துள்ளார். அது சீக்கிரம் அவிந்து சிதறும் சூழல் உருவாகும். எத்தனை நாட்களுக்குத் தான் அவர்கள் கூட்டணியைக் கட்டி வைத்திருப்பார்கள் எனப் பார்க்கலாம். தேர்தல் நெருங்கும் சமயத்தில் திமுக கூட்டணியில் இருந்து பல கட்சிகள் வரலாம். அப்போது நிச்சயம் எங்கள் தலைமையில் ஒரு மெகா கூட்டணி உருவாகும். அந்த கூட்டணி நிச்சயம் பாடத்தை கற்றுக் கொடுப்பார்கள். அடுத்து வரும் லோக்சபா தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமையில் நிச்சயமாக மெகா கூட்டணியை அமைப்பார். பாஜகவுடன் இப்போது அதிமுக கூட்டணி இல்லை. எப்போதும் இல்லை என்பதை எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டார்.
திமுகவினர் இப்போது மகளிர் உரிமை என்று மாநாடு ஒன்றை நடத்தியுள்ளனர். அவர்கள் மகளிருக்கு எதையும் செய்தது இல்லை. மாநாடு போடுகிறார்கள் சரி, அக்கட்சியின் மகளிரணி செயலாளராக உள்ள கனிமொழியை திமுகவால் கட்சித் தலைவராக அறிவிக்க முடியுமா.. பெண்ணுரிமை பேசும் ஸ்டாலின், கனிமொழியை தலைவராக அறிவிக்கட்டும். மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்ட போது அதற்கு ஆதரவாக முதலில் கையெழுத்துப் போட்டவர் ஜெயலலிதா தான். நானும் 1991- 96 காலகட்டத்தில் அமைச்சராக இருந்துள்ளேன். எனக்கு இந்த விவகாரம் குறித்து நன்கு தெரியும். அமைச்சரவை கோப்புகளை எடுத்துக் கூட பார்க்கட்டும். அதில் ஜெயலலிதா கையெழுத்து தான் இருக்கும். ஆனால், இன்று திமுகவினர் மக்களை ஏமாற்றுகிறார்கள். அதேபோல உள்ளாட்சி பொறுப்புகளில் மகளிருக்கு 50% வர வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தவரும் ஜெயலலிதா தான். இதன் மூலமாகவே இப்போது உள்ளாட்சி பொறுப்புகளில் சுமார் ஒரு லட்சம் பெண்கள் பதவியில் உள்ளனர். பெண்களால் இன்று அதிகாரத்திற்கு வர முடிகிறது என்றால் அதற்குக் காரணமே ஜெயலலிதா தான். இவ்வாறு அவர் கூறினார்.