அறநிலையத்துறையில் நம்பர் ஒன் திருடன் திமுக தான்: அண்ணாமலை

பிரதமர் மோடி பொய் சொல்ல மாட்டார். அவரது வார்த்தைக்கு திண்டுக்கல் பூட்டை விட வலிமை இருக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்னாமலை தனது 3-ஆம் கட்ட பாத யாத்திரையில் இன்று பேசினார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 3வது கட்டமாக இன்று திருப்பூர் அவிநாசியில் தனது பாதயாத்திரையை தொடங்கியுள்ளார். முன்னதாக பாதயாத்திரை தொடக்க நிகழ்வில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், எல் முருகன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது தமிழக பாஜக தலைவர் கே அண்ணாமலை கூறியதாவது:-

தமிழகத்தில் 1976 ம் ஆண்டும் முதல் 2013ம் ஆண்டு வரை வெறும் 13 சிலைகள் மட்டுமே கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் பிரதமர் மோடி ஆட்சியில் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்ட சிலைகள் 361. 2014- 2023ம் ஆண்டுகளில் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்ட சிலைகள் 361. அமெரிக்காவில், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் பணக்கார மனிதர்கள் வீட்டில் அலங்கார பொருளாக இருப்பதை மோடியால் ஏற்று கொள்ள முடியவில்லை. 9 ஆண்டுகளாக ஒரு ஒரு அரசோடு போராடி ஒரு ஒரு சிலையாக இந்தியாவுக்கு கொண்டுவந்துள்ளார். ஆகவே சனாதானத்தை அழிப்பேன் என்று உதயநிதி ஸ்டாலின் சொன்னால் 2024 ம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் வாக்குப்பட்டியலில் திமுக என்ற கட்சியை அழித்து விடுவர்.

1985ல் கொள்கை விலக்கு அறிவிப்பில் சொல்லும் போது தமிழகத்தில் அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலம் 5 லட்சத்து 25 ஆயிரம் ஏக்கர். ஆனால் இப்போது 2023ம் ஆண்டில் அவர்களிடம் இருக்கும் கணக்குப்படி கோவில் நிலம் 3 லட்சத்து 25 ஆயிரம் ஏக்கர். 2 லட்சம் ஏக்கர் நிலம் காணவில்லை. அதனால் தான் அறநிலையத்துறையை தமிழகத்தின் நம்பர் 1 திருடன் என்று சொல்கிறோம். அறநிலையத்துறையில் நம்பர் ஒன் திருடன் திமுக தான்.. இதனால் தான் மோடி அவர்கள் தெலுங்கானாவில் சொன்னார்.. தமிழகத்தில் இந்துக்கு எதிரான ஆட்சி நடக்கிறது என்று. தமிழகத்தில் கோவிலுக்கு எதிரான ஆட்சி நடக்கிறது என்று சொன்னார். மேலும் நமது கோவில்களுடைய சொத்துக்களை திமுக அரசு அறநிலையத்துறை மூலம் கூறுபோட்டு விற்றுக்கொண்டு இருக்கிறது என்று மோடி கூறினார். இதற்கு மு.க ஸ்டாலின் மறுத்து பேசினார். ஆனால் எங்களுடைய பிரதமர் மோடி அவர்கள் பொய் சொல்ல மாட்டார். அவரது வார்த்தைக்கு திண்டுக்கல் பூட்டை விட வலிமை இருக்கிறது.

பிரதமர் மோடி ஆட்சியில் 361 சிலைகள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் 50க்கும் மேற்பட்ட சிலைகள் தமிழகத்தை சேர்ந்தது. ஆனால் திமுக ஆட்சியில் என்ன நடந்தது.. இதனால் உரிமையோடு சொல்கிறோம்.. அவிநாசி லிங்கேஷ்வரரை வைத்துக்கொண்டு சொல்கிறோம். இந்த கோவிலுக்கும் இந்த சாமிக்கும் திமுக அரசு மிகப்பெரிய அநியாயத்தை செய்து வருகிறது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் நீங்கள் நிச்சயம் திமுகவை வீட்டுக்கு அனுப்புவீர்கள் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.